கோவை மாவட்டம் இருகூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் செயல்பட்டு வரும் குறுந்தொழில் நிறுவனத்தை சீல் வைக்க முயன்றதாக கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று தொழில்முனைவோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ஜேம்ஸ் தலைமையில், துணை தலைவர்கள் இராஜேந்திரன், சக்திவேல், கார்த்திகேயன், பாரத் ரவி, செயலாளர்கள் செந்தில்குமார், பரமசிவம், சிவதாணு, உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்
காந்திநகர் பகுதியில் விவசாயத்திற்கு தேவையான இயந்திரங்களை ஜாப் ஆர்டர்களாக தயாரிக்கும் ஏராளமான குறுந்தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அப்பகுதியில் குறுந்தொழில் நிறுவனம் நடத்தி வரும் சேகர் என்பவர், தனிப்பட்ட விரோதம் காரணமாக மணிகண்டன் என்பவருக்கு எதிராக பொய் வழக்கு புனைந்து, கடந்த ஐந்து மாதங்களாக இருகூர் பேரூராட்சிக்கும் தமிழக முதல்வருக்கும் தொடர்ந்து புகார் அளித்து வந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, உரிய விசாரணை இன்றி இருகூர் பேரூராட்சி அதிகாரிகள் மணிகண்டனின் தொழில் கூடத்திற்கு சீல் வைக்க முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இருகூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதுகுறித்து பேட்டியளித்த தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ், கோவை மாவட்டம் குறு, சிறு தொழில்கள் நிறைந்த மாவட்டம் என்றும், கோவையின் வளர்ச்சி இத்தகைய நிறுவனங்களை சார்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். தனிநபரின் அழுத்தம் காரணமாக தொழில் கூடத்தை சீல் வைக்க முயன்றது கண்டனத்திற்குரியது என்றும், தற்போது அந்த தொழில் கூடம் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொண்டு நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில்முனைவோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Leave a Reply