இனி ஆதார் நகல் தேவையில்லை – வருகிறது புதிய விதி

Spread the love
இந்தியாவில் ஆதார் அட்டை குடிமக்களின் முக்கிய அடையாள ஆவணம் எனப் பயன்படுத்தப்படுகிறது.

வங்கி கணக்கு திறப்பது முதல், விடுதி அறை பெறுவது வரை பல இடங்களில் ஆதார் நகல் அளிக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.

இந்நிலையில், விடுதிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பாட்டுக்கான இடங்களில் ஆதார் நகலை பெறுவதும், சேமிப்பதும் தடை செய்யும் புதிய விதி அமலுக்குவருகிறது.

ஆதார் நகலை சேமிப்பதால் தனிப்பட்ட தகவல்கள் கசிவதற்கான அபாயம் இருப்பதாகவும், இது தனியுரிமைக்கு எதிரானது என்றும் கூறி, இதற்கான புதிய விதியை யுஐடிஏஐ அறிமுகப்படுத்துகிறது. இதுதொடர்பான அரசாணை விரைவில் வெளியாக உள்ளது.

ஆஃப்லைனில் ஆதார் சரிபார்ப்பை மேற்கொள்ள விரும்பும் நிறுவனங்கள், யுஐடிஏஐ -யில் பதிவு செய்து இணைப்பு வசதி பெற்றுக்கொண்டு, டிஜிட்டல் வழியில் ஆதார் சரிபார்ப்பை செய்ய முடியும்.

பயனர்கள் ஆதார் செயலி மூலம் தங்களது ஆதார் விவரங்களை வழங்கினால் போதும். கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் சரிபார்ப்பு செய்யலாம்.

இதற்கான புதிய செயலியை யுஐடிஏஐ தற்போது சோதனை செய்து வருகிறது. மேலும் 18 மாதங்களில் முழுமையாக நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய செயலியின் மூலம் பயனர்கள் ஆதார் திருத்தங்கள், மேலும் செல்பேசி இல்லாத குடும்ப உறுப்பினர்களின் ஆதார் விவரங்களையும் நிர்வகிக்க முடியும்.

காகித நகல் தேவையில்லாமல், ஆஃப்லைன் சரிபார்ப்பை எளிதாக்கும், அதே நேரத்தில் தனியுரிமையைப் பாதுகாக்கும் விதமாக இந்த புதிய நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது.