பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் OHT ஆபரேட்டர்கள் தமிழகம் முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் CITU அமைப்பின் சார்பில் நடத்தப்பட்டது.
அரசாணை எண் 152, 139, 10 ஆகியவற்றை வாபஸ் பெற வேண்டும், ஒப்பந்த மற்றும் சுயஉதவிக் குழு தினக்கூலி பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், உயர் நீதிமன்ற உத்தரவின் படி ஊதியம் வழங்க வேண்டும், அவுட்சோர்சிங் ஒப்பந்த முறையை கைவிட வேண்டும், கொசு ஒழிப்பு பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், நகராட்சி பணியாளர்களுக்கு இஎஸ்ஐ–பிஎப் முறைப்படுத்த வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும், தூய்மை காவலர்களை நிரந்தரம் செய்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட CITU ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் தற்காலிகமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது.
இதுகுறித்து பேட்டியளித்த ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் ரத்தினகுமார், திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், பணியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பை வரவேற்பதாகக் கூறிய அவர், அதே நேரத்தில் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டால் அது பணியாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்த கட்டமாக தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்தார்.



Leave a Reply