இனி 45 வயதுக்கு மேற்பட்ட பெண் பயணிகளுக்கு லோயர் பெர்த்

Spread the love
இந்தியாவில் நீண்ட தூர பயணங்களுக்கு அதிகளவில் மக்கள் ரயில் போக்குவரத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் வயதானவர்கள் ரயில் பயணத்தை பாதுகாப்பானதாகவும் வசதியானதாகவும் கருதுகின்றனர். எனினும், சில சந்தர்ப்பங்களில் வயதான பெண்கள் மற்றும் முதியவர்கள் மேல் படுக்கை பயணம் செய்யும் நிலைக்கு தள்ளப்படுவது அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், ரயில்வே நிர்வாகம் முன்பதிவு விதிகளில் முன்னுரிமை வசதிகளை வழங்கி வருகிறது. அதன்படி, மூத்த குடிமக்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, அவர்கள் தனிப்பட்ட முறையில் எந்த விருப்பத்தையும் தேர்வு செய்யாவிட்டாலும், தானாகவே கீழ்படுக்கை (Lower Berth) இருக்கை ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகளில் ஒவ்வொரு பெட்டிக்கும் 6 முதல் 7 கீழ்படுக்கைகள் வரைவும், மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் 4 முதல் 5 கீழ்படுக்கைகளும், இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் 3 முதல் 4 கீழ்படுக்கைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடு முதியோர் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் எளிதான பயணத்தை உறுதி செய்யும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், ராஜ்தானி, சதாப்தி உள்ளிட்ட அனைத்து மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடன் பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்கான சிறப்பு முன்பதிவு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஸ்லீப்பர், மூன்றாம் வகுப்பு ஏசி மற்றும் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் தலா நான்கு கீழ்படுக்கைகள் அவர்களுக்கென பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஏதேனும் காரணங்களால் வேறு வகை படுக்கைகளில் பயணம் செய்யும் மூத்த குடிமக்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோருக்கு, கீழ்படுக்கை காலியாக இருந்தால், பயணத்தின் போது அதனை மாற்றி வழங்கும் வசதியும் மேற்கொள்ளப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது, பயணிகளின் பாதுகாப்பும், சௌகரியமான பயணமும் உறுதி செய்யும் முயற்சியாக கருதப்படுகிறது.