கோவை விமான நிலையம் அருகே தனது காதலனுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை கடத்திச் சென்று, மூவர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி, குற்றத்தில் ஈடுபட்ட சதீஷ் என்ற கருப்பசாமி, அவரது தம்பி கார்த்திக், மற்றும் அவர்களது உறவினர் தவசியை துப்பாக்கிச் சூட்டில் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். காயம் குணமாகிய பிறகு, மூவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில், கோவை மகளிர் கூடுதல் நீதிமன்ற நீதிபதி சிந்து முன்னிலையில் 50 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் 400 பக்க ஆதார ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 13 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கையில், முதல் குற்றவாளியாக கருப்பசாமி, இரண்டாவது குற்றவாளியாக கார்த்திக், மூன்றாவது குற்றவாளியாக தவசி பெயர் சேர்க்கப்பட்டுள்ளன. குற்றச்செயல் விவரங்கள், தடயங்கள், வாக்குமூலங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
காவல் துறையினர் தெரிவித்ததாவது, இது முதல் கட்ட குற்றப்பத்திரிக்கை, தேவையெனில் மேலும் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது என கூறினர். கைதான மூவரின் நீதிமன்ற காவல் கால எதிர்நாள் முடிவடைவதால், அவர்கள் மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், மூவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டபோது, அவர்கள் மற்றொரு கொலைச் சம்பவத்திலும் தொடர்புடையவர்கள் என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குரும்பபாளையத்தைச் சேர்ந்த ஆடு மேய்ப்பாளர் தேவராஜ், கடந்த மாதம் 2ஆம் தேதி செரப்பாளையம் காட்டுப் பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அங்கு மது அருந்திக்கொண்டிருந்த சதீஷ், கார்த்திக் மற்றும் தவசியை பார்த்த தேவராஜ், அவர்கள் ஏன் அங்கு மதுவுடன் அமர்ந்திருக்கிறார்கள் என்று கேட்டார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த மூவரும் கட்டையால் தாக்கி தேவராஜை கொலை செய்துள்ளனர்.
இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, தேவராஜ் மரணம் தொடர்பான கொலை வழக்கில் மூவரையும் விசாரிப்பதற்காக கோவில்பாளையம் போலீசார் சிறையில் இருந்து காவலில் எடுப்பதற்கான அனுமதி மனு தாக்கல் செய்ய உள்ளனர்.



Leave a Reply