சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற கருப்பசாமி (30), காளீஸ்வரன் என்ற கார்த்திக் (28), தவசி என்ற குணா ஆகிய மூவரும் இந்தக் குற்றவாளிகள். கடந்த நவம்பர் 2ஆம் தேதி இரவு, விமான நிலையம் அருகே காரில் காதலனுடன் இருந்த கல்லூரி மாணவியை மிரட்டி கடத்திச் சென்று, மூவரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். மாணவியின் காதலனை அரிவாளால் தாக்கி காயப்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த மூவரையும், நவம்பர் 3ஆம் தேதி துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கணறு பகுதியில் தப்பிப்போவதற்குள், தனிப்படைப் போலீசார் காலில் சுட்டுச் சரணடையச் செய்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தக் குற்றவாளிகள் சிறை ஒப்படைப்பு காலத்தில் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டபோது, நவம்பர் 2ஆம் தேதி காலையில் அவர்கள் ஒரு கொலை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. குரும்பபாளையம் அருகே மேல கவுண்டன்புதூரைச் சேர்ந்த தேவராஜ் (55) என்பவர் பலியாகியுள்ளார். ஆட்டு வியாபாரியான அவர், சேரப்பாளையம் காட்டுப் பகுதியில் மது அருந்திய நிலையில் இருந்த மூவரிடம் ஏன் அங்கு அமர்ந்திருக்கிறார்கள் என்று கேட்டதற்காக, வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த குற்றவாளிகள் தேவராஜை கல்லால் தாக்கி கொலை செய்தனர்.
காலையில் தேவராஜைக் கொலை செய்த இந்தக் கும்பல், இரவில் மீண்டும் வெள்ளக்கணறு–பிருந்தாவன் நகர் பகுதிக்கு வந்து மது அருந்தியபோது தான் மாணவி மற்றும் அவரது காதலனைப் பார்த்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதாவது ஒரே நாளில் முதலில் கொலை, பின்னர் கூட்டு பாலியல் வன்கொடுமை என இரண்டு கொடூரச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
சந்தேக மரண வழக்காக இருந்த தேவராஜ் மரணம் தற்போது கொலை வழக்காக மாற்றப்பட உள்ளது. இதற்காக குற்றவாளிகளை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவில் பாளையம் போலீசார் நீதிமன்றத்தில் மனு செய்ய உள்ளனர்.
இந்த இரட்டை குற்றச் சம்பவம் கோவையில் கடும் பதட்டத்தையும், மக்கள் மத்தியில் பெரும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.



Leave a Reply