கனமழையால் சேதமான பயிர்களுக்கு நிவாரணம்: ஹெக்டேருக்கு ரூ.20,000 – அமைச்சர் ராமச்சந்திரன்

Spread the love

கனமழையால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரந்த அளவில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசின் நடவடிக்கைகள் குறித்து வேளாண்மைத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலம் முழுவதும் மொத்தம் 85,521 ஹெக்டேரில் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக தெரிவித்தார். கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஹெக்டேருக்கும் ரூ.20,000 நிவாரணத் தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

மேலும், கனமழையால் ஏற்பட்ட சேதங்களை முழுமையாக கணக்கெடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும், அதற்கான பணி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்து வருவதாகவும் அமைச்சர் ராமச்சந்திரன் குறிப்பிட்டார். தற்போது பெய்துவரும் தொடர்ச்சியான மழையினால் ஏற்பட்டிருக்கும் கூடுதல் சேதங்களும் கணக்கெடுப்பு வரம்புக்குள் சேர்க்கப்படுகின்றன.

கணக்கெடுப்பு பணிகள் முடிந்தவுடன், பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.