கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை சுட்டுப் பிடித்த காவல்துறை

Spread the love

கோவை கவுண்டம்பாளையம் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே நேரத்தில் 12 வீடுகளில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை காவல்துறை சுட்டுப் பிடித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் ஏன் கோவை வந்தனர், கொள்ளையை எப்படித் திட்டமிட்டனர் என்பதற்கு கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் விளக்கம் அளித்தார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “கவுண்டம்பாளையம் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று நடைபெற்ற கொள்ளை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறோம். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்துள்ளோம். அவர்கள் குனியமுத்தூரில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததும், அங்கு சென்ற காவல்துறையினரை அவர்கள் தாக்க முயற்சி செய்தனர். இதில் ஒரு காவலருக்கு கையில் காயம் ஏற்பட்டது. தற்காப்பு நடவடிக்கையாக குற்றவாளிகளை சுட்டுப் பிடித்துள்ளோம்.”

கைது செய்யப்பட்டவர்கள் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இர்ஃபான், கள்ளு ஆரிஃப், ஆசிப் ஆகியோர். அவர்கள் குனியமுத்தூர் பகுதியில் 12 பேருடன் கூடி வீடு வாடகைக்கு எடுத்து, அலுமினிய பாத்திர வியாபாரிகள் எனக் கூறி தங்கி வந்துள்ளனர். இந்த மூவர் மட்டும் இரண்டு நாட்களுக்கு முன்பு அங்கு வந்து, துணி வியாபாரம் செய்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு தொடர்பாக 42 பவுன் தங்க நகை, 34 கிராம் கவரிங் நகை, 500 கிராம் வெள்ளி மற்றும் ரூ.1.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டு உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கவுண்டம்பாளையம் அடுக்குமாடியில் வீடுகள் அதிகமாக இருப்பதால் அதனை இலக்காகக் கொண்டு, மூன்று மணிநேரத்திற்குள் திருட்டை முடித்து தப்பியுள்ளனர். இவர்களுக்கு உள்ளூர் குற்றவாளிகள் உதவியிருக்க வாய்ப்புள்ளதால் அதுபற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் ஒரு நாள் முழுவதும் ஆட்டோவில் பயணம் செய்ததாகவும், அந்த ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

சூழ்நிலை காரணமாகத்தான் துப்பாக்கி பயன்படுத்த வேண்டி வந்ததாக ஆணையர் விளக்கினார். இந்த சம்பவத்தில் காயமடைந்த காவலர் பார்த்திபன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குடியிருப்பில் காவலாளிகள் இருந்தபோதும் சம்பவம் நடந்திருப்பதை முன்னிட்டு அங்கு சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்று குடியிருப்பு நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.