செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் என கேமிங் உலகில் நேரத்தை செலவிடும் இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கிடையில், நூலகமும் புத்தகமும் தன் உலகாக அமைத்து முன்னேறிய சிறுமி புனிதம், வாசிப்பாளராக மட்டுமன்றி எழுத்தாளராகவும் திகழ்ந்து வருகிறார். இவரது திறமையையும் விழிப்புணர்வையும் கண்டு புகழ்பெற்ற விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வியந்து பாராட்டியுள்ளார்.
கோவைையைச் சேர்ந்த 12 வயது சிறுமி புனிதம் செந்தில்குமார், “ஒரு சிறுமியின் 17 கனவுகள்” என்ற தலைப்பில் தனது முதல் புத்தகத்தை எழுதி, வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறார். பல விருதுகள் அவரது அலமாரியை அலங்கரிக்கின்றன. நான்கு வயதில் எல்.கே.ஜி. படிப்பது தொடங்கிய நாளிலிருந்து பள்ளியில் கிடைத்த வண்ணமயமான புத்தகங்களே, அவர் புத்தக உலகிற்குள் பயணிக்க காரணமாக அமைந்தன.
பாடநூல்களில் இருந்த ஆர்வம் பிற நூல்களுக்கும் தாழ்ச்சி அடையாமல், உலக வரலாறு, உண்மை சம்பவங்கள், கற்பனை கதைகள் என பல்வேறு பிரிவுகளில் 500-க்கும் மேற்பட்ட புத்தகங்களை அவர் வாசித்துள்ளார். புத்தக வாசிப்பினால் தனது கற்பனை வளமும் சிந்தனைத் திறனும் உயர்ந்ததாக புனிதம் தெரிவிக்கிறார். “புத்தகம் அறிவைக் கூர்மைப்படுத்தும் ஆயுதம். அது தான் என் சிறந்த நண்பன்” என்கிறார் அவர்.
உறவினர்களின் ஊக்கத்தால் புத்தகம் எழுத நினைத்த புனிதம், சமூக பொறுப்புகளை மையமாக வைத்து எழுத வேண்டும் என்ற நோக்கில் ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகளை மையமாகக் கொண்டு தனது அனுபவம், சிந்தனை மற்றும் கனவுகளை இணைத்து ஆங்கிலத்தில் தனது புத்தகத்தை எழுதியுள்ளார். இதில் வறுமை ஒழிப்பு, பசியில்லா நிலை, பொருளாதார வளர்ச்சி, உலக அமைதி போன்ற 17 குறிக்கோள்களையும் அழகாகப் பதிவு செய்துள்ளார்.



Leave a Reply