தவெகவில் இணைகிறாரா செங்கோட்டையன்??????

Spread the love

அதிமுக முன்னாள் அமைச்சரும் முன்னாள் எம்எல்ஏவுமான செங்கோட்டையன், இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, சென்னை பட்டினம்பாக்கத்தில் நடிகர் விஜயை நேரில் சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மதியம், செங்கோட்டையன் தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். கடந்த இரண்டு நாட்களாகவே அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்ற தகவல்கள் வலைவீசி வந்தன. இன்று ஏற்பட்ட இந்த நிகழ்வுகள் அந்த செய்திகளுக்கு வலுவான உறுதிப்பாடாக அமைந்ததாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

ராஜினாமாவுக்குப் பின்னர் சில மணி நேரங்களிலேயே செங்கோட்டையன், சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜய்யின் இல்லத்திற்கு சென்றார். அவர்களுடன் உரையாடல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. பின்னர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் விஜயை சந்தித்தனர். அங்கு முக்கியமான அரசியல் கலந்துரையாடல் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செங்கோட்டையன் தவெகவில் இணைவது “200 சதவீதம் உறுதி” எனக் கூறப்படும் நிலையில், இன்றைய சந்திப்பு தமிழக அரசியல் சூழலை மேலும் சுடச்சுட மாற்றியுள்ளது.