ஐ.டி நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி பால் வியாபாரியிடம் ரூ.70 லட்சம் மோசடி – தம்பதி கைது

Spread the love

கோவை அருகே பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வசிக்கும் பால் வியாபாரி கோவிந்தராஜிடம் ரூபாய் 70 லட்சம் மோசடி செய்த தம்பதியை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

காமாட்சிபுரத்தை சேர்ந்த ராஜாராம் மற்றும் அவரது மனைவி சௌந்தர்யா, மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வருவதாகக் கூறி, கோவிந்தராஜை பங்குதாரராக சேர்த்துக் கொள்ளுவதாக நம்ப வைத்து, விரைவில் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறியதாக கோவிந்தராஜ் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை நம்பிய கோவிந்தராஜ் முதலில் ரூ.6 லட்சம் வழங்கினார். பின்னர் தெரிந்தவர்களிடம் இருந்து கடன் எடுத்து மேலும் ரூ.64 லட்சம் கொடுத்தார். மொத்தம் ரூ.70 லட்சம் பெற்ற பிறகும், தம்பதி லாபம் தராததுடன், முதலீட்டுப் பணத்தையும் திருப்பி தர மறுத்ததோடு, அவரை மிரட்டியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட குற்றப்பிரிவு போலீசார் ராஜாராம்–சௌந்தர்யா தம்பதியை கைது செய்து, மோசடி பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.