பொள்ளாச்சி டாப்ஸ்லிப் பகுதியில் அரசு உணவகத்தை நடத்தி வரும் பழங்குடியின இளைஞர் பிரசாந்த், உணவகத்திற்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் டாப்ஸ்லிப் பகுதியில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அரசு வழங்கிய அனுமதியுடன் உணவகத்தை பிரசாந்த் நடத்தி வருகிறார். அந்த உணவகத்தில் பல பழங்குடியின குடும்பங்கள் வேலை செய்து தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டிவருகின்றன.
இந்நிலையில், வனத்துறையினர் உணவகத்தை புதுப்பிக்க வேண்டும் என கூறி உடனடியாக காலி செய்யுமாறு வலியுறுத்தி வருவதாக பிரசாந்த் கூறினார். டாப்ஸ்லிப் சுற்றுலாப் பகுதி என்பதால், டிசம்பர் – ஜனவரி மாதங்களில் புத்தாண்டு, பொங்கல் விடுமுறை காரணமாக அதிகமான சுற்றுலாப் பயணிகள் வரும் நிலையிலும், இந்த இரண்டு மாதங்களில் உணவகம் மூடப்பட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.
இதனால், புதுப்பிப்பு பணிகளை பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு செய்யும்படி ஆவணம் செய்து, உணவகத்தை இரண்டு மாதங்கள் இயங்க அனுமதி வழங்க மாவட்ட ஆட்சியரிடம் அவர் கோரிக்கை வைத்தார்.
மேலும், சுற்றுலா பயணிகளுக்கும் மலைவாழ் மக்களுக்கும் உதவியாக ஜீப் வாகனத்தை வாங்கியிருந்தும், அதற்கு அனுமதி வழங்காமல் வனத்துறை தாமதப்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
வனத்துறை மாற்று இடத்தில் உணவு சமைக்க அனுமதி வழங்க முன்வந்தாலும், அந்த இடத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் சுகாதார சிக்கல்கள் இருப்பதாகவும் பிரசாந்த் தெரிவித்தார். உணவகத்தில் பணிபுரியும் பழங்குடியின குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, குறைந்தது இரண்டு மாதங்களாவது கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
தற்போது டாப்ஸ்லிப் பகுதியில் வனத்துறையின் இரண்டு வாகனங்கள் மட்டுமே இயங்கும் நிலையில், தனது வாகனமும் இயக்க அனுமதி கிடைத்தால், அது பழங்குடியின மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.



Leave a Reply