எம்.ஜி.ஆருக்கு மனைவி ; சிவாஜிக்கு காதலி… நடிகை பி.எஸ்.சரோஜாவுக்கு 100 வயது

Spread the love

பழம்பெரும் நடிகை பி.எஸ். சரோஜா, தன்னுடைய நூறாவது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார்.

எம்.ஜி.ஆர் – சிவாஜி கணேசன் என்னும் இருபெரும் நடிகர்கள் இணைந்து நடித்த ஒரே படமான ‘கூண்டுக் கிளி’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு மனைவியாகவும் சிவாஜிக்கு காதலியாகவும் நடித்தவர்தான் பி.எஸ்.சரோஜா இவரைக் குறிப்பிட இந்த ஒரு அறிமுகமே போதுமென்றாலும், எம்.ஜி.ஆர் – சிவாஜி காலத்துக்கு முன்பே தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்தவர், கருப்பு வெள்ளை காலத்தில் பல வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்தவர். நடிப்புக்காக விருதுகளை வாங்கிக் குவித்தவர் .

சரோஜாவின் பூர்வீகம் சேலம். ஆனால் இவர் பிறக்கும் போது இவரின் பெற்றோர் வசித்தது திருவனந்தபுரம். பதினைந்து வயதில் குரூப் டான்சராக சினிமாவுக்குள் பிரவேசித்துவிட்டார். ஜெமினி, ஜூபிடர் உள்ளிட்ட பல பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் பணிபுரிந்தவர், அடுத்த சில வருடங்களிலேயே இயக்குனர் கே.சுப்ரமணியத்தின் பார்வையில் பட்டார். அவர் ‘விகட யோகி’ படத்தின் கதாநாயகி ஆக்கினார் .

தொடர்ந்து கே.சுப்ரமணியம் இயக்கிய படங்களில் நடிக்க தொடங்கினார். ‘கீத காந்தி’ என்ற படத்தில் நடித்த போது அதே படத்தில் பணிபுரிந்த நடனக் கலைஞர் போலோநாத் ஷர்மாவுடன் காதல் மலர இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.ஆனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே விதி விளையாட, விபத்து ஒன்றில் சிக்கினர் இருவரும். காயங்களுடன் சரோஜா உயிர் பிழைக்க போலோநாத் மரணமடைந்தார். கணவரின் மறைவால் மனமுடைந்து போன சரோஜா சில காலம் நடிப்பிலும் ஆர்வம் காட்டாதவரகவே இருந்தார்.

அதில் இருந்து மீண்டு , அறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில் ‘ஓர் இரவு’, , எம்.கே.டி தியாகராஜ பாகவதருடன் ‘அமரகவி’ என மீண்டும் நடிக்க தொடங்கினார். நடிகை சரோஜாவின் சினிமா வாழ்க்கையில் ‘கூண்டுக் கிளி’ படம்தான் முக்கியமானது. ராமண்ணா இயக்க எம்.ஜி.ஆர் சிவாஜி என்னும் இரு பெரும் ஆளுமைகளுடன் ஜோடி சேர்ந்தார் சரோஜா.

தறபோது, 100 வயதான சரோஜா சென்னையில் மகன் கணேஷ் ராமண்ணாவுடன் வசித்து வருகிறார்.