ஆசிரியர்கள் திட்டி தாக்கியதாகக் கூறி மனமுடைந்த ஒரு அரசுப் பள்ளி மாணவி, மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்ட நிலையில் பலத்த தீக்காயத்தால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் வால்பாறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வால்பாறை ரொட்டி கடை பகுதியில் வசிக்கும் முத்துவேல் குமரன் – வல்ஷா தம்பதியரின் மூத்த மகள் முத்து சஞ்சனா (15), வால்பாறை அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 10ம் தேதி, பள்ளியில் நடந்த நிகழ்வுகள் காரணமாக மனஉளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படும் சஞ்சனா, வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார்.
அக்கம்பக்கத்தினர் தீக்காயங்களுடன் இருந்த அவளை காப்பாற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கும், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டார். ஆனால் தீவிர சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் நேற்று இரவில் உயிரிழந்தார்.
மாணவியின் உறவினர்கள், பள்ளி ஆசிரியர்களின் திட்டும் தாக்குதலுமே சஞ்சனா தற்கொலைக்கு காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் சிகிச்சையில் இருந்தபோது மாணவி அளித்த வாக்குமூல வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், அறிவியல், தமிழ், ஆங்கில ஆசிரியர்கள் தன்னை “சரியாக படிக்கவில்லை” என்று கூறி பரீட்சை அட்டையை தூக்கி வீசியதாகவும், கன்னத்தில் அறைந்து, முட்டி போட வைத்து தண்டனை கொடுத்ததாகவும் சஞ்சனா கூறியுள்ளார்.
மாணவியின் பெற்றோர், “இது போன்ற நிலை எவருடைய குழந்தைகளுக்கும் ஏற்பக் கூடாது” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் சுதா, “ஆசிரியர்களிடத்தில் தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; அவர்களுக்கு தனிப்பட்ட பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட வேண்டும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் மாவட்டம் முழுவதும் கல்வி சூழலில் அதிர்ச்சியும் கவலையும் ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் இதுகுறித்து விரைவில் விசாரணை நடத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.



Leave a Reply