கோவை வனக்கோட்டம் போளுவாம்பட்டி வனச்சரகம், சாடிவயலில் 8 கோடி ரூபாய் செலவில், யானைகள் முகாம் அமைக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக, யானைகள் முகாம் பணிக்கு, டெண்டர் விடப்பட்டு கடந்தாண்டு ஏப்ரல் மாதம், சாடிவயலில், 50 ஏக்கர் பரப்பளவில், முகாம் பணிகள் துவங்கின.
பழைய யானைகள் முகாமில் இருந்த வசதிகளை புனரமைத்தும், கூடுதலாக, 18 புதிய யானைகள் ஷெட், 2 கரோல், இரண்டு கி.மீ., தொலைவிற்கு சோலார் மின்வேலி, 40 சோலார் விளக்குகள், 3 சிறிய குட்டைகள், பாகன்கள் தங்கும் விடுதிகள், 20 இடங்களில் தண்ணீர் வசதி, யானைகள் குளிப்பதற்கான ஷவர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, போர்வெல், சி.சி.டி.வி., கேமராக்கள், யானைகள் முகாமை சுற்றி அகழி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது. ஆனால், இன்னும், புதிய சாடிவயல் யானைகள் முகாம் திறக்கப்படாமலே உள்ளது.
இந்த வனச்சரகத்தில், தினசரி காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதும், விளைநிலங்களுக்குள் புகுவதும், மனித விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. மக்களை காக்க வரும் வனத்துறையினரும், காட்டு யானைகளால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, புதிதாக கட்டப்பட்ட யானைகள் முகாமை திறந்து, கும்கி யானைகள் கொண்டு வர வேண்டியது அவசியமாகிறது.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், ”சாடிவயல் யானைகள் முகாமில், இன்னும் சில பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இம்மாத இறுதிக்குள் அப்பணிகளும் நிறைவடையும். திறப்பு விழாவிற்கு, அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். அதோடு, யானைகளும் கொண்டுவர வேண்டும். இதற்கான அனுமதி கிடைத்தால், அடுத்த மாதத்தில், யானைகள் முகாம் திறக்க வாய்ப்புள்ளது என்றார்.



Leave a Reply