கடந்த 1911ம் ஆண்டு தும்குர் மாவட்டம் குப்பி என்ற இடத்தில் திம்மக்கா பிறந்தார். குடிசையில்தான் வாழ்ந்தார். கல்குவாரி வேலை. ஆனால், அவர் நட்டு வளர்த்த மரங்களின் இன்றைய மதிப்பு மட்டும் 400 கோடிக்கு மேல் என்கிறார்கள். சாலையில் இரு பக்கங்களிலும் மரம் நட்டு வளர்த்தவர் என்பதால், கன்னடத்தில்’சாலு மருத’ என்று அடைமொழியை கன்னட மக்கள் கொடுத்துள்ளனர். அதனால்தான், ‘சாலமருத திம்மக்கா’. கடந்த 80 ஆண்டுகளில் ஆலமரங்கள் உள்ளிட்ட 8 ஆயிரம் மரங்களை நட்டு இவர் வளர்த்து எடுத்துள்ளார்.
ஒரு கட்டத்தில் இவர் நட்ட மரங்கள் அத்தனையையும் பாதுகாக்கும் பொறுப்பை கர்நாடக அரசு ஏற்றுக் கொண்டது. பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட 12 விருதுகளை பெற்றுள்ள திம்மக்கா இன்று நம்முடன் இல்லை. தற்போது, 114 வயதான அவர் கடந்த சில மாதங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார். பெங்களுருவிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார். கடந்த 2023ம் ஆண்டில் திம்மக்காவுக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டது. அப்போது, ஆஞ்சியாகிராம் செய்யப்பட்டது. அதற்கு பிறகு, வயோதிகம் காரணமாக தொடர்ந்து, அவரின் உடல் நிலை மோசமாக தொடங்கியது. விளைவாக, திம்மக்கா என்ற தாயை மரங்கள் நிரந்தரமாக இழந்துள்ளன.
மரங்களை பாதுகாப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்வார் திம்மக்கா. ஒரு முறை பேஜ்பள்ளி – ஹலகுரு பகுதியில் அவர் வளர்த்த 384 ஆலமரங்களை வெட்டவுள்ளதாக திம்மக்கா கேள்விபட்டார் உடனடியாக, அப்போதையை கர்நாடக முதல்வர் குமாரசாமியை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, நான் 1960-ம் ஆண்டில் இந்த அனைத்து ஆலங்கன்றுகளையும் நட்டேன். இவற்றை என் பிள்ளைகள் போல் வளர்த்து வருகிறேன். நான் வளர்த்த மரங்களை வெட்ட விடமாட்டேன். அந்தப் பகுதியில் சாலை அமைக்கும் திட்டத்தையும் அனுமதிக்கமாட்டேன்’ என்று உறுதியாக கூறினார். இதையடுத்து, முதல்வர் குமாரசாமியும் அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு போட்டு, சாலை அமைக்கும் பணியை மற்றொரு பகுதிக்கு மாற்றினார்.
கடந்த 1995ம் ஆண்டு தனது சேவைக்காக திம்மக்கா முதல்முறையாக ‘நேஷனல் சிட்டிசன்’ விருதை பெற்றார். 2019ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது . அப்போதைய, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் விருதை பெற்ற போது, தாய் போல அவரின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தது, அவையில் இருந்தவர்களை நெகிழச் செய்தது. 2020ம் ஆண்டு கர்நாடகாவின் மத்திய பல்கலைக்கழகம் திம்மக்காவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.



Leave a Reply