தொடர்ந்து அதிகாரிகள் குழு தீவிர விசாரணை நடத்தி உயர்நீதி மன்றத்தில் இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அறங்காவலர்களை நியமனம் செய்யாமல் கிருஷ்ணசாமி தன்னிச்சையாகவே அறங்காவலர்களை நியமனம் செய்துள்ளார். மிகவும் பழமையான இந்த கோவிலில் கட்டுமான பணிகள் தொல்லியல் துறை, இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் நடந்து உள்ளது. கோவில் மலைப்பாதையில் 27இளைப்பாறு மண்டபங்கள் கட்டப்பட்டு உள்ளன. ஆனால் அதற்கான எந்தவித வரவு செலவு கணக்கோ, அதற்கான எந்த ஆவணமோ இல்லை. மேலும் இந்த கட்டுமான பணிகளுக்கு முறையான அனுமதியும் பெறாமல் கிருஷ்ணசாமி தன்னிச்சையாகவே செய்து உள்ளார். முறையான அனுமதி இன்றி Rs.50 முதல் Rs.1 லட்சம் வரை பல்வேறு விதமான தொகைகளில் நன்கொடை சீட்டுகள் அச்சடித்து ஏராளமான அளவில் பணம் வசூல் செய்து உள்ளனர். ஆனால் அதை கணக்கில் காட்டாமல் மறைத்து மோசடி செய்து உள்ளனர்.
திருக்கோவிலுக்கு சொந்தமாக 125 கோடி ரூபாய் மதிப்பில் மதுக்கரையில் புல எண் 415, 416, 417, 418, 419-ல் 28.15ஏக்கர் நிலம் இருக்கிறது. ஆனால் நிலம் இருப்பதே மறைக்கப்பட்டு உள்ளது. மதிப்புமிக்க அந்த இடத்தை கோவிலுக்கு வருமானம் வரும் வகையில் பயன்படுத்தாமல் நிலம் இருந்ததையே மறைத்து கோவிலுக்கு பெரிய அளவில் வருமான இழப்பு ஏற்படுத்தி உள்ளனர்.
நிரந்தர உண்டியல், மண்டபம், கடைகள் வாயிலாக வந்த வருமானம் மறைக்கப்பட்டு கோவிலுக்கு வருமானமே வரவில்லை என்று கூறி மோசடி செய்துள்ளனர். கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக தரும் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களையும் கணக்கில் காட்டவில்லை. இளைப்பாறு மண்டபங்கள் உள்பட ஏராளமான திருப்பணிகள் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடந்து உள்ளது. அதேபோல் லட்சக் கணக்கில் நன்கொடையும் வசூலிக்கப்பட்டு உள்ளது. அவை எதையும் கணக்கில் காட்டவில்லை. கோவில் பெயரில் வங்கி கணக்கும் இல்லை.
பவுர்ணமி, பிரதோஷம், சித்ரா பௌர்ணமி போன்ற விழா நாட்களில் தற்காலிக உண்டியல்களை அதிகளவில் நிறுவி உள்ளனர். விழா முடிந்ததும் உண்டியல்களில் உள்ள பணத்தோடு உண்டியல்களை அறங்காவலர் திருமூர்த்தி மற்றும் ஜெயச்சந்திரன், முரளி, மொபைல் ரவி, எலக்ட்ரீசியன் மயில்சாமி ஆகியோர் எடுத்து சென்று உள்ளனர். அந்த தொகையையும் கணக்கில் காட்ட வில்லை. கோவிலில் உள்ள சிலைகள், உலோக திருமேனி ஆகியவற்றுக்கு பதிவேடும் இல்லை. வரவு- செலவு கணக்குக்கும் பதிவேடு இல்லை. கோவில் ஊழியர்களுக்கான சம்பள பட்டியலும் இல்லை. ஏராளமான அளவில் கோவிலுக்கு வருமானம் வந்தும் அறங்காவலர்களிடம் கடன் வாங்கியே 31 ஆண்டுகளாக கோவில் நிர்வாகத்தை நடத்தியதாக கிருஷ்ணசாமி கூறுவது ஏற்புடையது அல்ல.
இந்த நிலையில் கடந்த 2023 ஆண்டு ஜூலை முதல் கோவிலுக்கு தனி அலுவலர் நியமிக்கப்பட்டு வரவு- செலவு கணக்குகள் முறைப்படுத்தப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் கோவிலுக்கு 70,45,370 ரூபாய் வருமானம் வந்துள்ளது. கோவில் பெயரில் வங்கியில் 12 லட்சம் ரூபாயும் டெபாசிட்டும் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 31 ஆண்டுகளாக கோவிலுக்கு வருமான இழப்பு ஏற்பட காரணமாக இருந்தது, பண மோசடி உள்ளிட்ட கிருஷ்ணசாமி மீதான 29 குற்றச்சாட்டுகளையும் ஆதாரப்பூர்வமாக அதிகாரிகள் குழு உயர்நீதிமன்றத்தில் நிரூபணம் செய்தது. இதையடுத்து கிருஷ்ணசாமியை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலின் வாழ்நாள் அறங்காவலர் பதவியிலிருந்து நிரந்தரமாக நீக்கி (டிஸ்மிஸ்) இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் உத்தரவிட்டார்.
உண்மையை உலகுக்கு கொண்டு வருவதற்காக உயர் நீதிமன்றத்தை நாடி வெற்றி கண்ட தொழிலதிபர் சி.கே.கண்ணன், சிவராஜ். அரவிந்த் ஆகியோரை கோவில் பக்தர்கள் பேரவை, இந்து அமைப்புகள், ஆதீன கர்த்தர்கள். ஆன்மீக பெரியோர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள், பொது மக்கள் வெகுவாக பாராட்டினார்கள். மேலும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோவிலில் பல்வேறு வகையில் முறைகேடுகள் செய்து சம்பாதித்த பணத்தை கிருஷ்ணசாமி மற்றும் அரசு பஸ் டிரைவர் திருமூர்த்தி ஆகியோரிடம் இருந்து மீட்டு கோவில் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சிவ பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.



Leave a Reply