“தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது -கோவை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

Spread the love

கோவை விமான நிலையத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி, தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைத்தார்.

அவர் கூறுகையில், “கோவை விமான நிலையம் பின்புறம் ஒரு பெண் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, போதைப்பொருள் குற்றவாளிகள் தாக்கி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பின்றி உள்ளனர். குற்றவாளிகள் காவல்துறையையே அச்சமின்றி செயல்படுகின்றனர்,” என்றார்.

திண்டிவனத்தில் காவலர் ஒருவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது அருவருப்பானது என்றும் அவர் தெரிவித்தார். “மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறை தானே குற்றச்சாட்டில் சிக்குவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது,” என அவர் கண்டனம் தெரிவித்தார்.

மேலும், “சமூக நலத்துறை அமைச்சரே 6,995 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதையும், அதற்காக 104 கோடி நிவாரணம் வழங்கப்பட்டதையும் ஒப்புக்கொண்டுள்ளார். இது தமிழகத்தின் சட்ட ஒழுங்கு நிலை எவ்வாறு சீர்குலைந்துள்ளது என்பதற்குச் சான்று,” என்றார்.

டி.ஜி.பி நியமனம் தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவித்தார். “யூ.பி.எஸ்.சி தேர்வு செய்து அனுப்பிய பட்டியலைப் பெற்றிருந்தும் நிரந்தர டி.ஜி.பி நியமிக்க அரசு தாமதிக்கிறது. உச்ச நீதிமன்றமே மூன்று வாரங்களில் பதில் வழங்க உத்தரவிட்டுள்ளது. அரசு விதிமுறைகளை பின்பற்றவில்லை,” என்றார்.

‘Sir’ திட்டம் குறித்து பேசுகையில், “வாக்காளர் பட்டியலை சீர்படுத்தும் பணிக்கு தி.மு.க எதிர்ப்பு தெரிவிக்கிறது. இறந்தவர்கள் மற்றும் இடமாற்றம் ஆனவர்கள் பெயர்கள் நீக்கப்படாமல் இருப்பது தேர்தலின் போது திருட்டு ஓட்டுக்கு வழிவகுக்கிறது,” என்று குற்றம்சாட்டினார்.

தொழில் முதலீட்டு திட்டங்கள் குறித்து, “எங்கள் ஆட்சியில் தொடங்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் பெயர் மாற்றி அடிக்கல் நாட்டுகிறது. 75% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேறியதாக சொன்னால், வேலை வாய்ப்புகள் எங்கே?” என கேள்வி எழுப்பினார்.

வரவிருக்கும் தேர்தல் கூட்டணி குறித்து, “தேர்தல் நேரத்தில் கூட்டணி அறிவிக்கப்படும்,” என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மேலும், ஜல்லிக்கட்டு குவாரி லஞ்சம் மற்றும் தி.மு.க-வின் குடும்ப ஆட்சி குறித்து அவர் கடுமையாக விமர்சித்தார்.