நிசான் நிறுவனம் ஜப்பானில் உள்ள அதன் யோகோஹாமா தலைமையகக் கட்டிடத்தை ரூ.5,598 கோடி) விலைக்கு விற்றுள்ளதாக அறிவித்துள்ளது. டோக்கியோவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான எம்.ஜே.ஐ கோடோ கைஷாவுக்கு இந்த கட்டிடம் விற்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையின் மூலம் நிசான் நிறுவனம் 73.9 பில்லியன் யென் (ரூ.4,265 கோடி) லாபம் ஈட்டியுள்ளது.
எனினும், நிசான் தொடர்ந்து இந்த கட்டிடத்தை அதன் தலைமையகமாக குத்தகைக்கு எடுத்து இயங்கும். விற்பனை மூலம் கிடைத்த நிதியைப் பயன்படுத்தி, தங்கள் உள்கட்டமைப்புகளை நவீனமயமாக்க நிசான் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான அமைப்புகள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் பணிகளை விரைவுபடுத்துவதன் மூலம் நிறுவனத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த இது உதவும் என்று நிசான் தெரிவித்துள்ளது. குத்தகை விவரங்கள் வெளியிடப்படவில்லை. எம்.ஜே.ஐ கோடோ கைஷா என்பது மின்ட் குழுமத்திற்குச் சொந்தமான ஒரு சிறப்பு நோக்க அறக்கட்டளை ஆகும். மின்ட் குழுமம் ஒரு முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஆகும். அதன் பங்குகள் ஹாங்காங் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த கடந்த 2024-25ஆம் நிதியாண்டில் 670.9 பில்லியன் யென் (ரூ.38,720 கோடி) நஷ்டத்தை நிசான் சந்தித்தது. இதனால், நிசான் நிறுவனம், லாபகரமான நிலைக்குத் திரும்ப கடுமையாகப் போராடி வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்த ஆண்டில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்ற இவான் எஸ்பினோசா தலைமையில் ஒரு மறுமலர்ச்சிப் பாதையை நிசான் உருவாக்கி வருகிறது. அதன் ஒருபகுதியாகவே, உலகளாவிய தலைமையக கட்டிடத்தை விற்று, அதிலிலேயே குத்தகைக்கு இருக்க நிசான் முடிவு செய்துள்ளது.
இது குறித்து நிசான் நிறுவனம் கூறுகையில், “சவாலான இந்த காலகட்டத்தில் நிறுவனத்தின் மாற்றத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், முக்கியமில்லாத சொத்துக்களில் இருந்து மதிப்பைத் திறக்கும் மூலதனத் திறனுக்கான ஒரு ஒழுக்கமான அணுகுமுறையை இந்த நடவடிக்கை பிரதிபலிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த நடவடிக்கை நிறுவனத்தின் புதுமைகளைப் புகுத்துதல், போட்டித்தன்மையுடன் இருத்தல் மற்றும் எதிர்கால வளர்ச்சிக்காக தீவிரமாக ஆராய்ச்சி செய்தல் ஆகிய உத்திகளையும் பிரதிபலிக்கிறது என்றும் நிசான் தெரிவித்துள்ளது.



Leave a Reply