சமீபத்தில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயசூர்யா பகிர்ந்த புகைப்படத்தை கண்டதும் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த புகைப்படத்தில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா உடல் மெலிந்து காணப்பட்டார். இந்த புகைப்படம் சமீபத்தில் கொழும்புவில் நடந்த தமிழ் யூனியன் அமைப்பின் 125வது ஆண்டு விழாவில் எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அர்ஜூனா ரணதுங்கா, அரவிந்த டி சில்வா, முத்தையா முரளீதரன், ஜெயசூர்யா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்களுக்கும் இது ரணதுங்காவா? என்று நம்பமுடியாமல் கேள்வி எழுப்பினர். அவருக்கு ஏதும் உடல் நல பாதிப்பா? என்றும் சந்தேகங்களால் துளைத்தனர். சிலர், இப்போது 20 வயது குறைந்து போல ரணதுங்கா காணப்படுகிறார் என்றும் பாசிடிவாக கூறினர். ஆனால், அர்ஜுனா ரணதுங்கா கடுமையான உழைப்பின் காரணமாகவே தனது உடல் எடையை குறைத்துள்ளார். தான் விளையாடும் காலக்கட்டத்திலேயே உடல் எடை காரணமாக பல பிரச்னைகளை அவர் எதிர்கொண்டார். அப்போது, பெயின்கில்லர் ஊசிகளை போட்டுக் கொண்டுதான் விளையாடியதாகவும் பேட்டிகளில் அவர் சொன்னதும் உண்டு.
தற்போது, 61 வயதான ரணதுங்கா 2024 ஆம் ஆண்டில், பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதற்கு, பிறகு ரணதுங்கா ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரித்து வருகிறார். விளைவாக ஸ்லிம்பாயாக மாறி விட்டார்.
இது குறித்து, ரணதுங்காக கூறுகையில், எனது தோற்றத்தை பற்றியது அல்ல. உடல்நலப் பிரச்சினையுடன் தொடர்புடையது. அறுவை சிகிச்சை செய்த 6 மாதங்களுக்குப் பிறகு, மிகவும் நன்றாக உணர ஆரம்பித்தேன். என்னால் படிகளில் ஏற முடிந்தது. தரையில் உட்கார முடிந்தது. கடந்த 10 ஆண்டுகளாக என்னால் செய்ய முடியாத பல விஷயங்களை இப்போது, என்னால் செய்ய முடிந்தது. எனக்கு தூங்கும் போது மூச்சுத்திணறல் இருந்தது. நீரிழிவு நோய் நெருங்கியது. இப்போது எல்லாம் போய்விட்டது. நான் மட்டுமல்ல எனது குடும்பத்தில் பலரும் இந்த அறுவை சிகிச்சை செய்துள்ளோம். இப்போது, முறையான உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சி காரணமாக இளம்வயது போல உணருகிறேன்’ என்கிறார்.



Leave a Reply