உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் நுண்துளை அறுவைசிகிச்சை துறையில் புதிய மாற்றங்களை உருவாக்கிய ஜெம் மருத்துவமனை தலைவர் பேராசிரியர் டாக்டர். சி. பழனிவேலு, உலக மருத்துவ துறையின் மிக உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான ஜப்பான் நாட்டின் தொராசிக் அறுவை சிகிச்சை சங்கத்தின் (JATS) வெளிநாட்டு கௌரவ உறுப்பினர் பட்டத்தை பெற்றுள்ளார்.
ஒசாகாவில் அக்டோபர் 23 முதல் 28 வரை நடைபெற்ற ஜேட்ஸ் 78வது ஆண்டு அறிவியல் மாநாட்டில் அவருக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டது.
உணவுக்குழாய் புற்றுநோய்க்கான அறுவைசிகிச்சை நடைமுறைகளில், குறிப்பாக குப்புற நிலையில் செய்யப்படும் உணவுக்குழாய் அகற்றல் என்ற நவீன நுட்பத்தை உலகில் முதன்முதலாக அறிமுகப்படுத்தி செயல்படுத்தியதற்காக டாக்டர் . பழனிவேலுவுக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அறுவைசிகிச்சை முறை உயிருக்கு ஆபத்தை குறைத்து சுவாசச் சிக்கல்கள்களை சீர்படுத்துவதோடு குறைந்த நாட்களில் நோயாளிகளை குணமடைய வைத்து விடும். தற்போது, இந்த மருத்துவ சிகிச்சை முறை, உலகின் பல முன்னணி மருத்துவமனைகளில் பயன்பாட்டில் உள்ளது.
கிண்டாய் பல்கலைக்கழக பேராசிரியரும் ஜேட்ஸ் மாநாட்டு தலைவரான தகுஷி யசுடா, “உணவுக்குழாய் புற்றுநோய்க்கான உலகளாவிய அறுவைசிகிச்சை முறையை மாற்றியமைத்தவர் டாக்டர் பழனிவேலு. அவரின் சிகிச்சை நுட்பம் ஜப்பானில் மட்டுமல்லாது பல நாடுகளில் அறுவைசிகிச்சை நடைமுறையாக மாறியுள்ளது” என பாராட்டினார்.
இந்த கௌரவத்தை பெற்ற டாக்டர் பழனிவேலு, “இந்த அங்கீகாரம் எனக்கு மட்டுமானதல்ல; ஜெம் மருத்துவமனை குழுவின் ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் மக்களுக்கு நாம் செய்யும் சேவைக்கான அங்கீகாரம். உலகில் எங்கு இருந்தாலும், ஒரு நோயாளி வலியின்றி வாழ உதவுவது தான் அறுவைசிகிச்சை நிபுணரின் உண்மையான வெற்றி.” என தெரிவித்துள்ளார்.
சமூக சேவையிலும் டாக்டர் பழனிவேலு ஈடுபட்டு வருகிறார். இவரின் ஜெம் மெடிக்கல் அறக்கட்டளை இதுவரை 65 இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி, 3,485க்கும் மேற்பட்ட இலவச லேப்ரஸ்கோபிக் அறுவைசிகிச்சையை செய்துள்ளது. அதோடு, 47,000க்கும் மேற்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய நோயாளிகளுக்கு உதவிக்கரமாக இருந்துள்ளது.
டாக்டர் பழனிவேலுவின் கண்டுபிடிப்பு, ஆய்வு, மற்றும் சமூக அர்ப்பணிப்பு, இந்தியாவை சர்வதேச மருத்துவத்துறையில் நம்பிக்கையுடனும் பெருமையுடனும் முன்னெடுத்து செல்ல உதவும் என்றால் அது மிகையல்ல.



Leave a Reply