சென்னை மாநகராட்சி அறிவிப்பு – தற்காலிக கொடிக்கம்பங்களுக்கு அனுமதி கட்டாயம்; விதிமுறைகள் மீறினால் உடனடி அகற்றம்!

Spread the love

தமிழகத்தில் பொது இடங்களில் அனுமதியின்றி அமைக்கப்படும் கொடிக்கம்பங்கள் குறித்து உயர்நீதிமன்றம் முன்பு வழங்கிய உத்தரவின் அடிப்படையில், சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

2025 ஜனவரியில், மதுரை கிளை உயர்நீதிமன்றம் அரசியல் கட்சிகள், சாதி மற்றும் மத அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து குழுக்களும் அனுமதியின்றி பொதுச் சாலைகள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சித் துறைகளின் சொத்துகளில் கொடிக்கம்பங்கள் அமைக்கக் கூடாது என்றும், ஏற்கனவே அமைக்கப்பட்டவை 2025 ஏப்ரல் 28க்குள் அகற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அந்த உத்தரவைத் தொடர்ந்து, தமிழக அரசு குழுக்களை அமைத்து கொடிக்கம்பங்கள் அமைக்கும் நடைமுறைக்கு புதிய வழிகாட்டுதல்களை வகுத்தது. அதன்படி, சாலைகளின் தார்கள் மேல், நடுவிலான செண்டர் மீடியன்களில் கொடிக்கம்பம் வைப்பது தடை செய்யப்பட்டது. மேலும், எந்தவொரு நிகழ்விற்கும் மூன்று நாட்களுக்கு மேல் கொடிக்கம்பங்களை வைக்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள புதிய செய்திக்குறிப்பில்,

  • மாநகராட்சி எல்லைக்குள் தற்காலிக கொடிக்கம்பங்களை அமைக்க அனுமதி கட்டாயம் என கூறப்பட்டுள்ளது.

  • அரசியல் கட்சிகள், மத அமைப்புகள், சங்கங்கள் உள்ளிட்டவை பிரசாரம், தேர்தல், தர்ணா, பண்டிகை நிகழ்வுகள் போன்ற சந்தர்ப்பங்களில் கொடிக்கம்பம் அல்லது பேனர் அமைப்பதற்கு முன் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • அனுமதியின்றி அமைக்கப்படும் தற்காலிக கொடிக்கம்பங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி உடனடியாக அகற்றப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை மீறுவோருக்கு மாநகராட்சி விதிமுறைகளின் கீழ் தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.