த.வெ.க. சிறப்பு பொதுக்குழு இன்று மாமல்லபுரத்தில் – முக்கிய அறிவிப்புகள் வெளியிட வாய்ப்பு; விஜய் உரைக்கு எதிர்பார்ப்பு அதிகம்!

Spread the love

கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவத்துக்குப் பிறகு, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) இன்று (நவம்பர் 5) தனது சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை மாமல்லபுரத்தில் நடத்துகிறது.

கரூர் விபத்துக்குப் பிறகு விஜய் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்காமல் இருந்த நிலையில், இக்கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 2,000 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.

கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, அழைப்பு கடிதம் மற்றும் தலைமைக்கழக அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கே நுழைவு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் காலை 9.15 மணிக்குள் அரங்குக்குள் வர வேண்டும் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன.

விஜய் அண்மையில் கரூர் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கியதோடு, அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார். அதன்பின் கட்சியின் அமைப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தி, பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்பட 28 பேர் கொண்ட நிர்வாகக்குழுவை நியமித்தார். மேலும், தொண்டரணி, மகளிரணி, இளைஞரணி, மாணவரணி ஆகியவற்றிற்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

அதோடு, நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு உறுதி செய்ய 2,500 பேரை கொண்ட மக்கள் பாதுகாப்பு படை அமைக்கப்பட்டு, ஓய்வுபெற்ற ஐ.ஜி. ரவிக்குமார் மற்றும் முன்னாள் போலீஸ் அதிகாரிகள் பயிற்சி அளித்துள்ளனர்.

இந்நிலையில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழுவில், த.வெ.க.வின் அடுத்தகட்ட அரசியல் வியூகங்கள் மற்றும் தேர்தல் தயாரிப்புகள் குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டம் முடிந்ததும் விஜய் சிறப்புரையாற்றவுள்ளார்; அவருடைய பேச்சு முழுமையாக நேரலை மூலம் மாநிலம் முழுவதும் ஒளிபரப்பப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.