கோவை மாணவி பாலியல் வன்கொடுமை – “எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாத கொடூரம்” : துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கண்டனம்

Spread the love

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது மிகுந்த அதிர்ச்சி மற்றும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்வைத் தொடர்ந்து, இந்திய துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்று (நவம்பர் 5) கோவை பெரிய நாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒன்னிபாளையம் கருப்பராயன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த அவர், செய்தியாளர்களை சந்தித்து,
“கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாத ஒரு கொடூரம். நம்முடைய கொங்கு மண்டலத்தில் இப்படிச் சம்பவம் நடந்துள்ளது தாங்க முடியாத வேதனையை தருகிறது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவது மற்றும் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுவது காவல்துறையின் பொறுப்பு. அவர்கள் தங்கள் கடமையை முழுமையாக நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இந்த துயரமான நேரத்தில், பாதிக்கப்பட்ட மாணவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் என் ஆறுதலையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய நிகழ்வுகள் இனி நடக்காதபடி நாம் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்,” என தெரிவித்தார்.