பெண்களின் பாதுகாப்பில் திமுக அரசு தோல்வியடைந்துள்ளது! — சீமான் கடும் கண்டனம்

Spread the love

கோவை வானூர்தி நிலையம் அருகே கல்லூரி மாணவியை கடத்திச் சென்று மூவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வை கண்டித்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது “எக்ஸ்” தளத்தில் கடும் பதவியை வெளியிட்டுள்ளார்.

அவரது பதிவில், “திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பட்டப்பகலில் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருள் புழக்கம் போன்றவை பரவலாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலைக்கு திமுக அரசின் சட்டம் ஒழுங்கு அலட்சியமே காரணம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாமல், அரசு மது மற்றும் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்கத் தவறியுள்ளது. காவல்துறை அரசியல் அழுத்தத்துக்கு இணங்க செயல்படுகிறது. இதனால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது,” என சீமான் சாடியுள்ளார்.

அதோடு, கோவை மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.