கோவை மாணவி பாலியல் வன்கொடுமை – “பெண்கள் பாதுகாப்பில்லா நிலை உருவாகியுள்ளது” என ஆதவ் அர்ஜூனா கண்டனம்

Spread the love

கோவையில் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டித்து பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக அரசை கடுமையாக விமர்சித்த ஆதவ் அர்ஜூனா, தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டதாவது:
“கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. பெண்கள் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாட முடியாத அளவுக்கு பாதுகாப்பின்மை நிலவுகிறது. இது தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் வெளிப்பாடு,” என்றார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது:
“பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்கள் அச்சமின்றி நடமாடும் சூழலை உருவாக்குவது அரசின் கடமை. ஆனால், அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நிகழ்ந்த சம்பவம் முதல் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்குக் காரணமாக மது மற்றும் போதைப் பொருட்களின் பரவலான பயன்பாடே முக்கியமானது. இதை கட்டுப்படுத்த காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,” எனவும் தெரிவித்தார்.

அதே சமயம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி விரைவில் குணமடைய வேண்டும் என்றும், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனை பெற வேண்டும் என்றும் ஆதவ் அர்ஜூனா வலியுறுத்தியுள்ளார்.