மாப்பிள்ளை… மாமா ; கோவையில் களைகட்டிய சி.பி.ராதாகிருஷ்ணன் பாராட்டு விழா

Spread the love

கோவை மண்ணின் மைந்தரான சி.பி.ராதாகிருஷ்ணன், குடியரசு துணைத்தலைவராக பொறுப்பேற்றதும் முதன்முறையாக கோவை வந்தார். அவருக்கு ‘கோயம்புத்தூர் சிட்டிசன்ஸ் போரம்’ அமைப்பின் சார்பில், நடந்த பாராட்டு விழா  நடந்தது.

இந்த விழாவில் ‘கொடிசியா’ தலைவர் கார்த்திகேயன், சக்தி குழுமத்தின் தலைவர் மாணிக்கம், கே.ஜி.குழுமத்தின் தலைவர் பாலகிருஷ்ணன், இந்திய தொழில் வர்த்தக சபை கோவை தலைவர் ராஜேஷ் லுந், சீமா தலைவர் மிதுன் ராமதாஸ் அகியோர் குடியரசுத் துணைத் தலைவருக்கு நினைவு பரிசினை வழங்கினர். 

மாலும் இந்த விழாவில் அதிமுக, திமுக, பாஜக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வந்திருந்தனர்.  அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

விழாவிற்கு வந்திருந்தவர்களை, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வரவேற்று அமர வைத்தார். அரங்கத்தில் இருந்த பா.ஜ.க தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன், எஸ் பி வேலுமணி மற்றும் அனைத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களையும் அருகில் சென்று வரவேற்றார். 

சிபிஆரை விமான நிலையத்தில் வரவேற்று விட்டு, சற்று தாமதமாக, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அரங்கில் தாமதமாக வந்தார். அவரை, எஸ்.பி. வேலுமணி வரவேற்றார்.  அப்போது, ‘அண்ணாமலைக்கும் ஒரு கை கொடுப்போம்’ என அம்மன் அர்ச்சுணன் சொன்னதும், அங்கு சிரிப்பலை எழுந்தது.

இதைத்தொடர்ந்து ஹெச். ராஜா உள்ளிட்ட பலருக்கும் வணக்கம் சொல்லி , நலம் விசாரித்தார் அண்ணாமலை. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரும் அண்ணாமலைக்கு எழுந்து நின்று வணக்கம் கூறினர்.  பாஜகவைச் சேர்ந்த சேலஞ்சர் துரை அண்ணாமலைக்கு  ‘மாப்பிள்ளை வணக்கம்’ என சொல்ல ‘மாமா வணக்கம்’ என்று அண்ணாமலை பதிலுக்கு சொல்ல கலகலப்பு ஏற்பட்டது. கோவை கே.ஜி.மருத்துவமனை தலைவர் பக்தவச்சலம் ‘ நீங்க நல்லவருங்க’ என்று அண்ணாமலையை கையைப் பிடித்துச் சொல்ல, சி.பி.ஆர் பாராட்டு விழா கோவை மக்களின் குடும்ப விழா போலவே மாறியது.

நிகழ்ச்சியில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியும், அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமனும் அருகருகே அமர்ந்து சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள்  பி ஆர் ஜி அருண்குமார், கே,ஆர்,ஜெயராம், செ. தாமோதரன், கந்தசாமி, முன்னாள் அமைச்சர் செ ம வேலுச்சாமி, நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ் பி அன்பரசன், இந்திய வர்த்தக சபை முன்னாள் தலைவர் நந்தகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.