“பிரதமர் மோடி வரலாற்றை திரித்து பேசுவது கண்டிக்கத்தக்கது” — தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம்!

Spread the love

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரலாற்றை திரித்து தவறான கருத்துகளை வெளிப்படுத்துவதை கண்டிக்கிறேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் நடைபெற்ற ‘ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்’ (Rashtriya Ekta Diwas) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றியபோது, “சர்தார் வல்லபாய் பட்டேல் ஜம்மு & காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க விரும்பினார், ஆனால் ஜவஹர்லால் நேரு அனுமதிக்கவில்லை” என தெரிவித்தார்.

இது வரலாற்று உண்மைக்கு புறம்பான கருத்து எனக் கண்டித்து, செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டதாவது:

“1947 அக்டோபர் 26 அன்று ஜம்மு & காஷ்மீர் இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தம் கையெழுத்தானது. அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் பட்டேல் இருவரும் இந்திய ஒருமைப்பாட்டுக்காக இணைந்து செயல்பட்டனர்.
இருவரையும் எதிராக நிறுத்தும் முயற்சி வரலாற்றையும் தேசத்தின் கண்ணியத்தையும் சிதைக்கும் செயல்.
வரலாற்றை அரசியலுக்காக வளைத்து பேசுவது பிரதமர் பதவிக்கு அழகல்ல. மக்கள் இதனை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்,” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், பீகார் தேர்தலை முன்னிட்டு வாக்கு வங்கியை குறிவைத்து பிரதமர் மோடி கூறிய இந்த உரை நாட்டின் ஒற்றுமையை பாதிக்கும் வகையில் உள்ளது என்றும், இதுபோன்ற “விஷமமான பிரச்சாரங்களை” தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது என்றும் கூறினார்.