ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சொத்துக்கள் முடக்கப்பட்டதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
2007-ம் ஆண்டு, ஐஎன்எக்ஸ் மீடியா குழுமம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி பெற வெளிநாட்டு முதலீட்டு வாரியத்தின் ஒப்புதலை பெற்றது. இதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர்மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை (ED) வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இதையடுத்து, 2018-ம் ஆண்டு கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான ரூ.54 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இந்த நடவடிக்கைக்கு எதிராக, கார்த்தி சிதம்பரம் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், உறுப்பினர்கள் பாலேஷ் குமார் மற்றும் ராஜேஷ் மல்ஹோத்ரா அமர்வில் வழக்கின் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது, “அமலாக்கத்துறை சொத்துக்களை முடக்கிய ஒரு வருடத்திற்கு பிறகே அரசு தரப்பு புகாரை பதிவு செய்துள்ளது. எனவே, முடக்கம் சட்டவிரோதம்” என கார்த்தி சிதம்பரம் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
ஆனால், “அந்த காலம் கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால், உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி அவ்வாறு காலக்கெடு தொடர்பான விலக்கு உள்ளது” என அமலாக்கத்துறை வாதித்தது.
அமலாக்கத்துறையின் வாதத்தை ஏற்றுக் கொண்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம், கார்த்தி சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.



Leave a Reply