ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்க பொய்யான தகவல் பரப்புகிறது திமுக அரசு – அண்ணாமலை குற்றச்சாட்டு

Spread the love

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, திமுக அரசு பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்கும் நோக்கில் பிரதமர் பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழர்கள் குறித்து பேசியதாக பொய்யான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

சென்னையில் இருந்து கோவை வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்து, “தமிழகத்தின் உள்ளாட்சித் துறையில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. உள்ளாட்சித் துறை அமைச்சர் கே. என். நேரு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இத்தகைய குற்றச்சாட்டுகளை மறைக்க திமுக அரசு பிரதமரை குறித்த தவறான தகவல்களை பரப்புகிறது,” என்றார்.

மேலும் அவர் கூறியதாவது: “கடந்த காலங்களில் திமுக தலைவர்கள் பீகார் மக்களை அவமதிக்கும் வகையில் பேசியுள்ள வீடியோக்கள் உள்ளன. பிரதமர், அதனைப் பற்றியே குறிப்பிட்டார். ஆனால் திமுக அரசு இதைத் திரித்து தவறான முறையில் வெளிப்படுத்துகிறது.”

அவர் தொடர்ந்து, “தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை திமுக எதிர்த்து வருகிறது. இது வழக்கமான நடைமுறை. வாக்காளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள தவறுகள் மற்றும் முறைகேடுகள் சரிசெய்யப்படுவதே இதன் நோக்கம். யாருடைய வாக்குரிமையும் பறிக்கப்படவில்லை; மாறாக, அனைவரது வாக்குரிமையும் பாதுகாக்கப்படுகிறது,” எனவும் தெரிவித்தார்.