குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவைக்கு வந்ததை ஒட்டி, டவுன்ஹால் அருகே காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பல்வேறு அரசியல் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள், பாஜகவினர் என ஏராளமானோர் திரண்டிருந்தனர். துணை குடியரசுத் தலைவர் வருகையையொட்டி அந்த பகுதியில் கடுமையான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், திடீரென இரண்டு இளைஞர்கள் ஸ்கூட்டரில் வந்தனர். யாரும் எதிர்பாராத விதமாக அவர்கள் போலீஸ் தடுப்பை மீறி, துணை குடியரசுத் தலைவர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்குள் நுழைந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க முயன்றபோது, அந்த இளைஞர்கள் தங்களது வாகனத்தில் வேகமாக தப்பிச் சென்றனர். இதையடுத்து, போலீசார் சம்பந்தப்பட்ட இளைஞர்களைத் தேடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட தகவலின்படி, அந்த இரு இளைஞர்களும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், துணை குடியரசுத் தலைவர் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாகக் கூறி பாஜகவினர் திடீர் மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்த சம்பவத்தால் டவுன்ஹால் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சில நேரம் போக்குவரத்து நெரிசலும் பதட்டமும் நிலவியது.



Leave a Reply