அதிமுக ஆட்சியில் நாற்று நடும் அளவிற்கு நெல் மணிகள் முளைத்திருந்தன, இப்போது சிறியதாகவே முளைத்திருக்கிறது என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசிய கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் பெய்த மழை காரணமாக பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளைப் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று (அக்.22) சந்தித்து, சேதங்களைப் பார்வையிட்டார். அப்போது, நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் முளைத்துள்ளன. விவசாயிகளுக்கு இந்தத் தீபாவளி கண்ணீர் தீபாவளியாக மாறியிருக்கிறது என்று குற்றம்சாட்டினார்.
பின்னர் அதற்குப் பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் 700 மூட்டைகள்தான் கொள்முதல் செய்யப்பட்டன. ஆனால் திமுக ஆட்சியில் 1000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்படுகின்றன என்றும் அதிமுக ஆட்சியில் நாற்று நடும் அளவிற்கு நெல் மணிகள் முளைத்திருந்தன, இப்போது சிறியதாகவே முளைத்திருக்கிறது என்றும் பேசினார்.
இந்நிலையில் இதற்குப் பதிலளிக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
“நான், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்களுடன் நேரில் ஆய்வு செய்து, விவசாயிகள் படும் துயரை எடுத்துக் கூறிய பிறகும், முதலமைச்சர், நான் பொய் குற்றச்சாட்டு சுமத்துவதாகவும், விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் பேட்டி அளிக்கிறார். ஆனால், விவசாயத் துறை அமைச்சரோ 16,000 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட நெல் பயிர் பாதிப்படைந்துள்ளது என்று பேட்டி கொடுக்கிறார். உணவுத் துறை அமைச்சர் நெல் கொள்முதல் செய்ய தாமதம் ஏற்பட்டதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று கூறுகிறார். அதில் விவசாயத் துறை அமைச்சர், அதிமுக ஆட்சியில் நாற்று நடும் அளவிற்கு முளைத்த நெல்மணிகள், இப்போது சிறியதாகவே முளைத்துள்ளன என்கிறார். நெல் சிறிதளவு முளைத்தால் என்ன ? நாத்து நடும் அளவுக்கு முளைத்தால் என்ன? நெல் முளைத்துவிட்டாலே அது வீண் தானே.
அதிமுக ஆட்சியில் ஒரு நாளைக்கு 600 முதல் 700 மூட்டைகள் கொள்முதல் செய்ததாகவும், இப்போது ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார். திமுக ஆட்சியில் நாளொன்றுக்கு 800 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில் 1000 மூட்டைகளாக உயர்த்தி கொள்முதல் செய்யப்பட்டது. 2021-ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், கொள்முதல் செய்வது 800 மூட்டையாகக் குறைத்தது இந்த அரசு. கொள்முதல் விளைச்சலை ஒட்டித்தான் அமையும். கூடுதலாக நெல் வந்தால் வாங்கத்தானே வேண்டும். மேலும், கொள்முதல் செய்த மூட்டைகளை அடுக்க இடம் இல்லை, சாக்கு இல்லை என்று ஒரு நாளைக்கு 800 மூட்டைகளைக் கூட கொள்முதல் செய்யாமல் விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியது இந்த அரசு.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்



Leave a Reply