திருநெல்வேலி மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநர் செல்வ சேகரன் மீது எழுந்த சொத்துக் குவிப்பு மற்றும் கனிம வள முறைகேடு புகார்களைத் தொடர்ந்து, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அவரது வீடுகள் மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் கடந்த 24ம் தேதி அதிரடிச் சோதனை நடத்தினர்.
திருநெல்வேலி கனிம வளத்துறை உதவி இயக்குநர் செல்வ சேகரனுக்குச் சொந்தமான திருநெல்வேலி என்.ஜி.ஓ. காலனி வீட்டிலும் திண்டுக்கல், விருதுநகர் வீடுகளிலும் சோதனை நடந்தது. கனிம வள முறைகேடுகள் மற்றும் சொத்துக் குவிப்பு குறித்துக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்றது.
அதிகாரி செல்வ சேகரன் கோடிக்கணக்கில் சொத்து குவித்திருப்பதாகவும், வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்துள்ளன.
பல இடங்களில் கால்நடை பண்ணைகள் அமைத்து அதில் முதலீடு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. திண்டுக்கல்லில் பல்வேறு குவாரிகளைப் பினாமி பெயரில் எடுத்து நடத்தி வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றின் ஏஜென்சியை எடுத்து மிகப்பெரிய அளவில் வியாபாரம் செய்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
தனது தோழிகளுக்கு திருநெல்வேலி கேடிசி நகரில் ஒன்றே கால் கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு ஒன்றை வாங்கி கொடுத்திருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
கனிமவளத் துறையில் நடை சீட்டுவழங்கும்போது, ஒரு முறையான பரிவர்த்தனையில் வரும் ஒரு ‘ஓ.டி.பி’-க்கு 2000 ரூபாய் வரை இவர் லஞ்சம் வாங்கியதாகவும் புகார் எழுந்துள்ளது.



Leave a Reply