தஞ்சையை சேர்ந்த ஹரீஷ், பிரகாஷ், திருச்சியை சேர்ந்த சபா ஆகிய மூவரும் வாட்டர் வாஷ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்கள். இவர்களுடன் தோட்டக்கலைத்துறை மூன்றாம் ஆண்டு மாணவரான தஞ்சை பிரபாகரன், அரியலூரை சேர்ந்த அகத்தியன் ஆகியோரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.
இன்று ஹரீஷின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, வாட்டர் வாஷ் செய்யப்பட்டிருந்த காரை ஐந்து பேரும் இணைந்து எடுத்துச் சென்றுள்ளனர். கொண்டாட்டத்தின் போது மது அருந்திய நிலையில், அதிக வேகத்தில் பயணம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பேரூர்–பச்சாபாளையம் இடையே செட்டிபாளையம் பிரிவை கடந்தபோது, எதிரே வந்த வாகனத்துக்கு வழி விட முயற்சித்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர புளியமரம் அருகிலிருந்த மேஜையில் மோதியது. அதன் பின்னர் புளியமரத்திலும் அதிவேகமாக மோதியதால், காரில் இருந்த ஏர்பேக்குகள் திறந்தாலும் பயனில்லை.
ஹரீஷ், பிரகாஷ், அகத்தியன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பிரபாகரன் மற்றும் சபா ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சபா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரபாகரன் தீவிர சிகிச்சையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிறந்தநாள் கொண்டாட்டம் உயிரிழப்பாக மாறியதால், அந்த பகுதி முழுவதும் துயரச் சுழல் ஏற்பட்டுள்ளது.



Leave a Reply