தமிழக விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கிய பங்காற்றிய மருது சகோதரர்களின் 224வது நினைவு தினம் இன்று (24.10.2025) மாநிலமெங்கும் அனுசரிக்கப்பட்டது. ஆங்கிலேய ஏகபோக ஆட்சிக்கு எதிராக துணிச்சலுடன் போரிட்ட மருது பாண்டியர்கள் 24 அக்டோபர் 1801 அன்று தூக்கிலிடப்பட்டனர். அவர்களின் வீரத் தியாகத்தை போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு இந்த நினைவு நாளை அரசு விழாவாக கடைப்பிடித்து வருகிறது.
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தனது எக்ஸ் தளப் பதிவில் மருது போராளிகளை நினைவுகூர்ந்து வணங்கி உள்ளார். அவர் பதிவில் கூறியதாவது:
“இந்திய துணைக் கண்டத்திலேயே முதன்முதலில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக யுத்தம் பிரகடனம் செய்து, வீரம் நிறைந்த போராட்டத்தில் ஈடுபட்டு, தாய்மண்ணின் சுதந்திரத்திற்காக தூக்கு கயிறையும் பொருட்படுத்தாமல் தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரத் தமிழர்கள், மாமன்னர் மருது சகோதரர்கள். அவர்களின் 224-ஆவது நினைவு தினம் மற்றும் குருபூஜை நாளான இன்று, அவர்களின் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.”
இதையொட்டி, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ள மருது பாண்டியர் மணிமண்டபத்தில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர்தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



Leave a Reply