வளர்பிறை முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் மாநிலம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில், 24 அக்டோபர் (வெள்ளிக்கிழமை) முதல் 26 அக்டோபர் (ஞாயிற்றுக்கிழமை) வரை அதிகமான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்ளவுள்ளனர் என எதிர்பார்க்கப்படுவதால், தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு சேவைகளும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கம் நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு 24ஆம் தேதி 365 பேருந்துகள் மற்றும் 25ஆம் தேதி 445 பேருந்துகள் இயக்கப்படும்.
அதேபோல், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு திசைகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன.
மாதாவரம் நிலையத்திலிருந்தும் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதனுடன் ஞாயிற்றுக்கிழமை (26 அக்டோபர்) அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வரும் பயணிகளுக்காக தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, வெள்ளிக்கிழமை 9,164 பயணிகள், சனிக்கிழமை 8,575 பயணிகள், ஞாயிற்றுக்கிழமை 16,108 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதுடன், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் தங்களது பயணத்திற்கான முன்பதிவை www.tnstc.in இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பயணிகள் வசதிக்காக அனைத்து முக்கிய பேருந்து நிலையங்களிலும் போதுமான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், பொதுமக்கள் இந்த வசதியை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளுமாறு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.



Leave a Reply