கோவை ஒப்பணக்கார வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி சில்க்ஸ் என்ற துணிக்கடையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
அதிகாலை 4.30 மணியளவில், கடையின் இரண்டாவது மாடியில் இருந்து புகை வெளியேறியதை பாதுகாவலர்கள் கவனித்து, உடனடியாக கடை உரிமையாளர் பாபுவுக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு துறையினர், நான்கு தீயணைப்பு வாகனங்களுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ இரண்டாவது மாடியில் பரவியதால், கிரேனின் உதவியுடன் மேல்தளத்திலிருந்து தீயை கட்டுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து தீ அணைக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர்.
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த முயற்சிக்குப் பிறகு, தீ பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தது. இருப்பினும் புகை வெளியேற்றப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன.
தீ விபத்தால் ஒப்பணக்கார வீதியில் போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.



Leave a Reply