என் பின்னால் ரசிகர்கள் இல்லை, கருத்தியல் மணிகள்!” – விஜயை மறைமுகமாக தாக்கிய சீமான் பேச்சு வைரல்

Spread the love

சென்னை: “என் பின்னால் ரசிகர்கள் கூட்டம் இல்லை, அது கருத்தியல் மணிகள் கூட்டம்” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இந்த பேச்சு, நடிகரும் தவெக தலைவருமான விஜயை மறைமுகமாக தாக்கியது என அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி, விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் இடம்பெற்றது. இதைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் தவெக கட்சியின் நிர்வாக திறனை சாடியிருந்தது. அந்த விமர்சனங்களுக்குப் பின்னர், பல தரப்பிலிருந்து விஜய் மீதும் அவரது கட்சி அமைப்பினர்மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த சூழலில், சீமான் சமீபத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் பேசியபோது கூறியதாவது:

“என்னை பின் தொடர்வது ரசிகர்கள் கிடையாது. அது கருத்தியல் மணிகள் கூட்டம். உணர்வும் தத்துவமும் கொண்ட லட்சக்கணக்கான இளைஞர்கள் எனக்குப் பின்னால் இருக்கிறார்கள்.
இது சீருடை அணியாத, ஆயுதம் ஏந்தாத கருத்தியல் புரட்சிப்படை. நான் வைத்திருப்பது ரசிகர்கள் அல்ல, நெல்மணிகள் — ஒன்று விதைத்தால் ஆயிரம் முளைக்கும்.”

அவர் மேலும்,

“பாஜக தனியா நிக்கட்டும், நானும் தனியா நிக்கிறேன். என்னை விட ஒரு ஓட்டு கூட வாங்கி காட்டச் சொல்லுங்கள்,”
என்று தெரிவித்தார்.

சீமான் கூறிய இந்தப் பேச்சு, “விஜயை நோக்கிய மறைமுக விமர்சனமாகும்” என்று அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக விவாதிக்கின்றன.

கரூர் நிகழ்வுக்குப் பிறகு விஜயின் ரசிகர் கூட்டத்தின் இயல்பு மற்றும் நிர்வாகக் குறைபாடுகளை சுட்டிக்காட்டும் வகையில் இந்த பேச்சு வந்துள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.