தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கோவை மாநகரில் அவிநாசி சாலையில் புதிதாக கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தை திறந்து வைத்தார்.
உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலம், தமிழ்நாட்டின் மிக நீளமான உயர்மட்ட சாலை எனும் பெருமையைப் பெற்றுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினுடன் மறைந்த கண்டுபிடிப்பாளர் ஜி.டி. நாயுடு அவர்களின் மகன் ஜி.டி. கோபால் இணைந்து திறப்பு விழாவை நிகழ்த்தினார்.
திறப்பு விழாவுக்குப் பின்னர் முதலமைச்சர், புதிய மேம்பாலத்தின் அமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை நேரில் ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வில் கோவையின் மூத்த தொழிலதிபர்கள், கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தொழில் குழும நிர்வாகிகள் கலந்து கொண்டு, கோவைக்கு இத்தகைய முக்கியமான போக்குவரத்து வசதியை வழங்கியதற்காக தமிழக அரசுக்கு நன்றிகளைத் தெரிவித்தனர்.
ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர் எஸ். மலர்விழி அவர்கள், முதலமைச்சரிடம் நன்றிகளை தெரிவித்ததோடு, கோவையின் வளர்ச்சிக்காக இந்தப் பாலம் ஒரு புதிய அடையாளமாக இருக்கும் எனக் கூறினார்.
மொத்தம் ₹1791 கோடி மதிப்பீட்டில் கடந்த 5 ஆண்டுகளில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டது.
கட்டுமானத்தில் ஜெர்மன் தொழில்நுட்பமான “சைனஸ் பிளேட் எக்ஸ்பான்ஷன் ஜாயிண்ட் (Sinus Plate Expansion Joint)” தொழில் நுட்பம் தமிழ்நாட்டில் முதல்முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேம்பாலத்தின் மேல்புறமும் கீழ்புறமும் பசுமை புல்வெளிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை சொட்டு நீர் பாசன முறை மூலம் பராமரிக்கப்படுகின்றன. இது சுற்றுச்சூழல் நட்பு நகரமைப்பு முயற்சிக்கான சிறந்த முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது.
இந்த புதிய உயர்மட்ட சாலை திறப்பால், கோவை மாநகரின் அவிநாசி சாலையில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மேம்பாலம், கோவையின் வளர்ச்சியையும், தமிழ்நாட்டின் சாலை அமைப்பு முன்னேற்றத்தையும் பிரதிபலிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டமாக திகழ்கிறது.



Leave a Reply