ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் மோஷின் நக்விடமிருந்து கோப்பையை பெற மாட்டோம்- சூரியகுமார் யாதவ்

Spread the love

பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பைப் போட்டியை இந்திய அணிப் புறக்கணிக்க வேண்டும் என்ற மக்களின் கருத்தை மறுத்து பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால், டாஸின்போது இரு அணி கேப்டன்களும் கைகொடுத்துக் கொள்ளவில்லை. போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொள்வது வழக்கம், அதுவும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது, நடக்கவில்லை.
போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ், ‘நம் அரசுடன் பிசிசிஐ-யும், நாங்களும் நிற்கிறோம். கைகுலுக்க வேண்டாம் என்ற முடிவை நாங்கள் எடுத்தோம். விளையாடவே இங்கு வந்தோம். விளையாடினோம் அவ்வளவு
தான். வாழ்க்கையில் சில விஷயங்களும், சில முடிவுகளும் ஸ்பார்ஸ்மேன்ஷிப்புக்கு அப்பாற்பட்டது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு ஆதர
வாக நாங்கள் நிற்கிறோம். அவர்கள் குடும்பத்துடன் நிற்கிறோம். இதன் மூலம் நமது ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம் ‘என்று கூறினார்.
அதேவேளையில், இந்திய வீரர்கள் கைகுலுக்காமல் சென்றது பாகிஸ்தான் வீரர்களை ஏமாற்றமடைய செய்ததாக பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து கூறும்போது, “நாங்கள் கைகுலுக்கத் தயாராகவே இருந்தோம். இந்திய அணியின் செய்கை எங்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தது. நாங்கள் கைகொடுக்கத்தான் காத்திருந்தோம். ஆனால், அவர்கள் ஏற்கெனவே ஓய்வறைக்குள் கதவை சட்டென்று சாத்தி விட்டனர்” என்றார்.
இதற்கிடையே, நடுவர் ஆன்டி பைஃகிராப்ட் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றம் சாட்டியுள்ளது. அவர், ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்புடன் மைதானத்தில் நடந்துக் கொள்ளவில்லை. அவரை, ஆசியப் போட்டிக்கான நடுவர் பதவியில் இருந்து விலக்கினால் மட்டுமே அடுத்த போட்டியில் பாகிஸ்தான் விளையாடும் என்றும் கூறி விட்டதாக தெரிகிறது.
இது தொடர்பாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர் உஷ்மான் வாக்லா, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘டாஸ் போடுகையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகாவை இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவுடன் கை குலுக்க வேண்டாமென்று நடுவர் ஆன்டி பைகிராப்ட் கூறியுள்ளார்.
ஒரு போட்டி நடுவர் எப்படி மற்றொரு அணியின் கேப்டனுடன் கை குலுக்க வேண்டாமென்று கூறலாம்? இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவிடமும் இதையே நடுவர் கூறியுள்ளார். தான் பேசியதையும் தனது மூவ்மன்டையும் ரிக்கார்டு செய்ய கூடாது என்றும் பாகிஸ்தான் மீடியா இயக்குநரிடத்தில் நடுவர் கூறியிருக்கிறார்.
பின்னர், நடுவர் பைகிராப்ட் மற்றும் போட்டி இயக்குநர் ஆன்ட்ரூ ரஸ்ஸல் ஆகியோர் பாகிஸ்தான் அணி மேலாளர் நவீத் சீமாவிடத்தில் இந்திய அரசு மற்றும் பி.சி.சி.ஐ.யின் முடிவின்படி கைலுக்கும் சம்பிராதயம் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, துபாயில் செப் 17- ல் நடந்த பாகிஸ்தான் – யு.ஏ.ஈ போட்டிக்கு ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ஆன்டி பைகிராப்ட் விலக்கப்பட்டு, வெஸ்ட் இண்டிசின் ரிச்சி ரிச்சர்ட்சன் நடுவராக பணியாற்ற போவதாக சொல்லப்பட்டது. ஆனால், ஆன்டி பைகிராப்ட்தான் போட்டி நடுவராக பணியாற்றினார்.
டாஸ் அவர் முன்னிலையில்தான் போடப்பட்டது.
இதற்கிடையே, இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றொரு அதிர்ச்சிக்கரமான முடிவை எடுத்துள்ளார்.
தற்போது, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி உள்ளார். ஆசியக் கோப்பை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணிக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் என்ற வகையில் கோப்பையை வழங்க மோஷின் நக்வி முன்வரலாம். ஆனால், இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் இந்தியா வெற்றி பெற்றால் கோப்பையை மோஷின் நக்வியிடம் இருந்து வெற விரும்பவில்லை என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் முன்னதாகவே தெரிவித்து விட்டார்.
சூரியகுமாரின் முடிவை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலும் ஏற்றுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. திடீரென்று மைதானத்தில் கைகுலுக்க மறுப்பது போன்ற சங்கடத்தை ஏற்படுத்தாமல், முன்கூட்டியே தங்களிடத்தில் முடிவுகளை கூறி விட்டால், மைதானத்தில் தர்மசங்கடத்தை தவிர்க்க உதவுமென்று பாகிஸ்தான் தரப்பில் சொல்லப்பட்டதாகவும் தெரிகிறது.