உறுப்புதானம் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதனை ஊக்குவிக்கும் முயற்சிகளில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் கோவையின் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உறுப்புதானத்தில் முன்னோடியாக விளங்குவது தமிழ்நாடு. மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கும் குடும்பங்களுக்கு, 2023 செப்டம்பர் மாதம் முதல் அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, பலர் முன்வந்து தான உறுதிமொழி செய்து வருகின்றனர்.
மேலும், 2009ஆம் ஆண்டு துணை முதலமைச்சராக இருந்தபோது, தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் இணைந்து உறுப்புதானத்திற்குப் பதிவு செய்து, மாநில மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் ஆவார்.
இந்த அடிப்படையில், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, உறுப்புதானம் குறித்த உன்னத விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 2025ஆம் ஆண்டு தேசிய அளவிலான பிரம்மாண்ட முயற்சியை மேற்கொண்டது. மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இதனை துவக்கிவைத்தார்.
இதன் மூலம், 2025 பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை மொத்தம் 45,861 பேர் உறுப்புதான உறுதிமொழி செய்துள்ளனர். இந்த சாதனைக்கு உலக சாதனைகள் பதிவுசெய்யும் ‘வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் யூனியன்’ அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இத்தகைய சமூக அக்கறையுடன் தொடர்ந்து செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையை பாராட்டும் வகையில், இந்த மருத்துவமனையை நடத்தும் எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உறுப்புதானத்தில் சாதனை – ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு முதலமைச்சர் பாராட்டு



Leave a Reply