ஆசிரியர் தகுதி தேர்வு (TET) தொடர்பாக ஆசிரியர்கள் அச்சம் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை, சட்ட ரீதியில் அரசு வெற்றி பெறும் என தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கோவை, காளபட்டி பகுதியில் தனியார் சர்வதேச பாடத்திட்ட பள்ளி கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு வருகிற 19ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு நியமிக்கப்பட்டவர்களுக்கே பொருந்தும். முன்பே வேலை வாய்ப்பு மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியில் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது. எனவே சட்ட ரீதியாக நம் நிலைப்பாடு வலிமையானது. ஆசிரியர்கள் அச்சப்படத் தேவையில்லை. தமிழக ஆசிரியர்களை நாங்கள் பாதுகாப்போம்” என்று தெரிவித்தார்.
பகுதி நேர ஆசிரியர்கள் குறித்து அவர், “அவர்களும் அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்களின் ஆலோசனைகளை எடுத்துக்கொண்டு, அவர்களின் பணி நிலையை விரைவில் சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.
மேலும் அன்புக் கரங்கள் திட்டம் குறித்து பேசும் போது, “ஒரு பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு மாதம் ரூ.2,000 வீதம் 18 வயது வரை வழங்கப்படுகிறது. அவர்கள் கல்வியில் இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக அரசு துணை நிற்கிறது. பன்னிரண்டாம் வகுப்புக்கு பின் கல்லூரி கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்கும் அரசு ஆதரவளிக்கும்” என குறிப்பிட்டார்.
தமிழக வெற்றி கழகம் திமுகவை குறிவைக்கிறது என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்காமல் சென்றார்.



Leave a Reply