நடிகர் விஜய்யின் சனிக்கிழமை அரசியல் : பின்னணி என்ன?

விஜய்
Spread the love

 

2026 -ஆவது சட்டமன்ற தேர்தல் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே சொல்லலாம். இந்த தேர்தல் களத்தில் புது வரவு என்றால் அது ‘தமிழக வெற்றி கழகம்’ தான். விஜய்யின் அரசியல் பிரவேசத்தால் வரும் தேர்தல் அமளிதுமளியாக போகிறது என்றே சொல்லலாம்

விஜய் அரசியலில் குதிப்பார் என்று நினைத்தது இன்று நேற்றல்ல 2013 ஆம் ஆண்டு தலைவா படம் வெளியாகி “time to lead” என கேப்ஷன் வைத்து அதற்காக அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை கடுப்பேற்றி மன்னிப்பு கேட்ட விவகாரமெல்லாம் அவரின் அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தின. ஆனால் அவரோ “ஓடு மீன் ஓட உறுமீன் வருமென” காத்திருந்த கொக்குபோல காத்திருந்து அரசியலில் குதித்துள்ளார். அரசியல் எதிரியாக திமுக -வையும் கொள்கை எதிரியாக பாஜகவையும் முன்னிருத்தி தன் அரசியல் பயணத்தை துவங்கியுள்ளார்.

தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் முழுமூச்சாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் விஜய், தவெக சார்பில் மதுரையில் மிகப்பெரிய 2 -வது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில்தான் மக்களை நிச்சயம் சந்திப்பேன் என பேசியிருந்தார். அதன்படியே திருச்சியில் தொடங்கி தமிழகம் முழுவதும் விஜய் மக்களை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. வருகிற 13 -ஆம் தேதி துவங்கி டிசம்பர் 20 வரியிலும் இவரின் சுற்றுப்பயணம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவரின் இவரின் பயன் தேதிகள் அனைத்தும் சனிக்கிழமைகளில் வருகின்றன.

ஏற்கனவே விஜய் ஒர்க் ப்ரம் ஹோம் அரசியல் செய்கிறார் என்ற பேச்சு எழுந்த நிலையில், அவரின் மக்கள் சந்திப்புதான் பலருக்கும் ஆறுதலாக இருந்தது. ஆனால் இந்த பிரசாரமும் வெறும் சனிக்கிழமைகளில் மட்டும் நடப்பதால் இதுவும் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இதுகுறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் , “நானும் எப்படியெல்லாமோ யோசித்து பார்த்தேன், ஏன் விஜய் இந்த கிழமையை தேர்வு செய்கிறார் என்று யோசித்து பார்த்தேன். அப்போதுதான் ஒரு விஷயம் புரிந்தது. விஜய்யின் ஆதரவாளர்கள் ஒன்று பள்ளிக்கு செல்லுவோர் அல்லது கல்லூரிக்கு செல்லுவோர். அவர்களின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்ற உயரிய நோக்கத்தில் தான் அவர் சனிக்கிழமையைஅவர் தேர்வு செய்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,அரசியல்வாதிகள் 24 மணி நேரமும் வேலை செய்ய வேண்டும். எப்போதும் மக்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். ஆனால் விஜய்யின் இந்த போக்கு அவரின் அரசியல் வாழ்க்கைக்கு நல்லதல்ல என்றார்.