மதுக்கரை சுங்கச்சாவடியில் போராட்டம் – உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண ரத்து கோரிக்கை

Spread the love

கோவை நீலாம்பூர்–வாளையார் கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் முன்பு ஆறு சுங்கச்சாவடிகள் செயல்பட்டன. இதில் மதுக்கரை தவிர்ந்த ஐந்து சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பு ரத்து செய்யப்பட்டது. எனினும் மதுக்கரை சுங்கச்சாவடியில் மட்டும் கட்டணம் தொடர்ந்ததால், அப்பகுதி மக்களின் அதிருப்தி அதிகரித்தது.

சுங்கச்சாவடியை கடந்து செல்லும் உள்ளூர் வாகன உரிமையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை ரத்து செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் சலுகை அளிக்க வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். ஆனால் அது ஏற்கப்படவில்லை.

இதையடுத்து ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள் திடீர் என மதுக்கரை சுங்கச்சாவடியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். “ஐந்து சுங்கச்சாவடிகளில் கட்டணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், மதுக்கரை சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்களிடம் மட்டும் கட்டணம் வசூலிப்பது நியாயமல்ல. இது எங்களுக்குப் பெரும் கூடுதல் செலவாகிறது. எனவே கட்டண வசூல் ரத்து செய்யப்பட வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தனர்.

தகவல் அறிந்த மதுக்கரை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். காவல்துறையினர், அவர்களின் கோரிக்கைகளை எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.