கோவை கஸ்தூரி நாயக்கன் பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி – பெண் பக்தையால் அதிகாலை 2 மணிக்கு சந்தன அலங்கார பூஜை

Spread the love

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவை கஸ்தூரி நாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற அரசமரத்து விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கடந்த 24 ஆண்டுகளாக, அப்பகுதியைச் சேர்ந்த புவனேஷ்வரி என்ற பெண், விநாயகர் சதுர்த்தி நாளன்று அதிகாலை சந்தன அலங்கார சிறப்பு பூஜை செய்து வருகிறார். இவ்வருடமும் அதிகாலை 2 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் அபிஷேகம் செய்து, பட்டு வஸ்திரம் அணிவித்து, அருகம்புல் மாலை சூட்டி விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்தார்.

பின்னர் புவனேஷ்வரி, “நாட்டு மக்களின் நலனுக்காக வருடந்தோறும் இந்த சிறப்பு பூஜையை செய்து வருகிறேன். விநாயகர் அருளால் அனைவரும் ஆரோக்கியமாகவும் வளமாகவும் வாழ வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அப்பகுதி மக்கள் திரளாகக் கலந்து கொண்டு, பக்தியுடன் விநாயகரை வணங்கி வழிபட்டனர்.