வந்தாச்சு ஓணம்… களைகட்ட போகும் கோவை கல்லூரிகள்

Spread the love

மலையாள மக்களின் அறுவடை திருவிழாவாக ஓணம் பண்டிகை கருதப்படுகிறது. மலையாள மொழி பேசும் மக்கள் மன்னர் மகாபலியை வரவேற்கும் பொருட்டு ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையின் 10 நாட்களில் ஒவ்வொரு நாளும் சிறப்பு கொண்டாட்டத்துடன் தொடரும். இதில் 64 வகையான ஓண சத்யா விருந்து, படகுப்போட்டி, மலர் அலங்கார போட்டிகள் உட்பட பல நடைபெறும்.

ஆவணி மாதத்தில் திருவோணம் நட்சத்திரம் நாளில் ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. திருவோண நட்சத்திர நாளில் விஷ்ணு பகவான் பூவுலகில் பிறந்து வாமண அவதாரம் எடுத்ததாக மக்களால் நம்பப்படுகிறது. ஓணம் பண்டிகையானது அஸ்தம் நாளில் தொடங்கி திருவோணம் வரை 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த பண்டிகையில் 10 நாளான திருவோணம் முக்கிய நட்சத்திர நாளாகவும் கருதப்படுகிறது.

2025-ஆம் ஆண்டுக்கான ஓணம் பண்டிகை ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. கேரள மக்களின் நம்பிக்கை படி கேரளாவை ஆட்சி செய்து வந்த அரசன் மகாபலி தனது ராஜ்யத்தை விரிவுபடுத்த யாகம் ஒன்றை மேற்கொண்டார். இந்த யாகத்தை அவர் வெற்றிகரமாக நடத்தினால் இந்திரலோகம் அவரது வசப்படும் நிலையும் உண்டாகியுள்ளது. இதனால் கலங்கிப்போன தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று முறையிட்டுள்ளனர். G

இதனை அடுத்து தேவர்களை காக்க மூன்றடி உயரம் கொண்ட வாமண வடிவம் எடுத்த விஷ்ணு பகவான், மகாபலி யாகம் நடத்தும் இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு யார் என்ன கேட்டாலும் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையில் 3 அடி நிலம் வேண்டும் என வாமணர் கேட்டுள்ளார். இதனை ஏற்றுக்கொண்டு மகாபலி மன்னனும் கமண்டலத்தில் இருக்கும் நீரை வாமணரின் கையில் ஊற்றிய நிலையில், விண்ணுக்கும் மண்ணுக்குமாக மிகப்பெரிய உருவமெடுத்த மகாவிஷ்ணு முதல் அடி வானத்தையும், இரண்டாவது அடி பூமியையும் அளந்துள்ளார்.

மூன்றாவது அடிக்கு இடமில்லாத காரணத்தால் மகாபலி மன்னனுக்கு முக்தி அளிக்க அவரது தலை மீது கால் வைத்து பாதாள லோகத்திற்கு அனுப்பி இருக்கிறார். அதே நேரத்தில் தன்னை நம்பிய மக்களை காப்பாற்ற ஒவ்வொரு ஆண்டும் பூமிக்கு வர மகாபலிக்கும் விஷ்ணு வரமளித்தார். இந்த வரத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் மகாபலி தனது மக்களை காண ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில் வருகிறார். இதுவே ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு அறுசுவை உணவுகளில் கசப்பு சுவையை மட்டும் தவிர்த்து மற்ற சுவைகளில் 64 வகையான ஓண சத்யா என்ற உணவு தயாரிக்கப்படும். அதன்படி அரிசி மாவில் செய்யப்பட்ட அடை, அவியல், அரிசி சாதம், பருப்பு, பால் பாயாசம், பரங்கிக்காய் குழம்பு, ஊறுகாய், சீடை, சாம்பார், பச்சடி, கூட்டு, நெய், மோர், ரசம் உள்ளிட்ட உணவுகளை மக்கள் சமைத்து தெய்வங்களுக்கு படைத்து வழிபடுவர். மேலும் கேரள மன்னனான மகாபலி மன்னனை வரவேற்க ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அத்தப்பூ கோலமிடுவர்.

கோலத்தை பொறுத்தவரை முதல் நாளில் ஒரே வகையான பூக்களை வைத்து கோலமிடுவது, இரண்டாம் நாளில் இரண்டு வகையான பூக்களை வைத்து கோலமிடுவது, மூன்றாம் நாளில் மூன்று வகை, நான்காம் நாளில் நான்கு வகை பூக்கள் என தொடங்கி பத்தாம் நாளில் 10 வகை பூக்களை கொண்டு அழகிய அத்தப்பூ கோலத்தை இடுவர். ஆவணி மாதம் கேரளாவை பொறுத்தவரையில் பூக்கள் குலுங்கும் மாதம் என்பதால் மக்கள் பூக்கோலம் இட்டு ஓண திருவிழாவை கொண்டாடுவர். இதனைத் தொடர்ந்து வெண்ணிற ஆடை அணிந்து பெண்கள் நடனமாடியும் மகிழ்வர். ஓணம் பண்டிகையில் கொண்டாடப்படும் 10 நாட்களில் முதல் நாள் அத்தம் என்றும், மற்ற நாட்கள் சித்திரா, சுவாதி, விசாகம், அனுஷம், திருக்கேட்டா, மூலம், பூராடம், உத்திராடம் மற்றும் திருவோணம் என ஒவ்வொரு நாளையும் வரிசைப்படுத்தி கொண்டாடுவர்.

கோவை நகரில் ஏராளமான மலையாள மக்கள் வசிப்பதால், நகரமே களை கட்ட தொடங்கியுள்ளது. கல்லூரிகளிலும் மாணவ , மாணவிகள் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்வார்கள்.