தேசிய ஜனநாயக கூட கூட்டணி கட்சி சார்பாக குடியரசு துணைத்தலைவர் பதவிக்கு வேட்பாளராக நிற்கும் பாஜகவைச் சேர்ந்த மகாராஷ்டிர ஆளுநர் ஸ்ரீ சி.பி. ராதாகிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
கடந்த ஜூலை 31, 2024 அன்று மகாராஷ்டிர ஆளுநராக ஸ்ரீ. சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். அவர் நியமிக்கப்படுவதற்கு முன்பு, அவர் ஜார்க்கண்ட் ஆளுநராக கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றினார். ஜார்க்கண்ட் ஆளுநராக, தெலுங்கானா ஆளுநரின் பணிகளை நிறைவேற்றுவதற்காகவும், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராகவும் இந்திய ஜனாதிபதியால் சி.பி. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். 40 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் பொது வாழ்வில் மரியாதைக்குரியவர் இவர்மே 4, 1957 அன்று தமிழ்நாட்டின் திருப்பூரில் பிறந்த ஸ்ரீ ராதாகிருஷ்ணன் வணிக நிர்வாகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஆர்.எஸ்.எஸ் சுயம்சேவகராகத் தொடங்கி, 1974 இல் பாரதிய ஜனசங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரானார். 1996 ம் ஆண்டு சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் பாஜகவின் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1998 ம் ஆண்டு கோயம்புத்தூரிலிருந்து முதன்முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999 ம் ஆண்டு மீண்டும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர், எம்.பி.யாக இருந்த காலத்தில், ஜவுளித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராகப் பணியாற்றினார். பொதுத்துறை நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு (பி.எஸ்.யு) மற்றும் நிதிக்கான ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராக இருந்தார். பங்குச் சந்தை ஊழலை விசாரிக்கும் நாடாளுமன்ற சிறப்புக் குழுவின் உறுப்பினராக இருந்தார். 2004 ம் ஆண்டு, சி.பி. ராதாகிருஷ்ணன் ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றினார்.
இதற்கிடையே, 2004 மற்றும் 2007 ம் ஆண்டு வரை சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் பாஜகவின் மாநிலத் தலைவராகப் பணியாற்றினார். இந்தப் பொறுப்பில், அவர் 93 நாட்கள் நீடித்த 19,000 கி.மீ. ‘ரத யாத்திரை’யை மேற்கொண்டார். இந்திய நதிகளை இணைப்பது, பயங்கரவாதத்தை ஒழிப்பது, சீரான சிவில் சட்டத்தை அமல்படுத்துவது, தீண்டாமையை ஒழிப்பது மற்றும் போதைப்பொருளை தடுப்பதற்காக அவர், இந்த பாத யாத்திரையை மேற்கெண்டார்.
2016 ம் ஆண்டில், இவர் கொச்சியில் உள்ள கயிறு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார், அந்தப் பதவியை அவர் நான்கு ஆண்டுகள் வகித்தார். அவரது தலைமையில், இந்தியாவில் இருந்து கயிறு ஏற்றுமதி ரூ. 2532 கோடியாக உயர்ந்தது. 2020 முதல் 2022 வரை, கேரளாவிற்கான பாஜகவின் அகில இந்தியப் பொறுப்பாளராக இருந்தார். பிப்ரவரி 18, 2023 அன்று, ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டார். தனது முதல் நான்கு மாதங்களுக்குள், ஜார்க்கண்டின் 24 மாவட்டங்களுக்கும் பயணம் செய்து, குடிமக்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் உரையாடினார்.
விளையாட்டு வீரரானசி.பி ராதாகிருஷ்ணன் டேபிள் டென்னிஸில் கல்லூரி சாம்பியனாகவும், நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரராகவும் இருந்தார். கிரிக்கெட் மற்றும் கைப்பந்து விளையாட்டுகளையும் விளையாடுவார். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், நார்வே, டென்மார்க், சுவீடன், பின்லாந்து, பெல்ஜியம், ஹாலந்து, துருக்கி, சீனா, மலேசியா, சிங்கப்பூர், தைவான், தாய்லாந்து, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பங்களாதேஷ், இந்தோனேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் இவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.



Leave a Reply