திரைப்பட தயாரிப்பாளரும், பிரபல கல்வி நிறுவனத்தின் நிறுவனருமான ஐசரி கணேஷ் மீது அவரது சகோதரியே மோசடி புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐசரி கணேஷ் ஒரு பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், வேல்ஸ் கல்வி குழுமத்தின் நிறுவனரும் ஆவார். இவர் எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் இவரது தங்கை அழகு தமிழ்ச்செல்வி அவர் மீது சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.
பின்னர்,செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர், “என்னுடைய தந்தை ஐசரி வேலன் கடந்த 1987ஆம் ஆண்டு காலமானார். இதையடுத்து, எனது சகோதரர் ஐசரி கணேஷ் தான் தந்தையின் சொத்து, வணிகம் என அனைத்திற்கும் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
அந்த காலத்தில் நாங்கள் மிகுந்த கடன் தொல்லையில் இருந்தோம். அப்போது, எம்ஜிஆரின் உதவியால் அனைத்து கடனும் அடைக்கப்பட்டு, அதன் பிறகு தான் வேல்ஸ் கல்வி குழுமத்தை தொடங்கினோம். அப்போது இருந்து வேல்ஸ் கல்விக் குழுமத்தில் நிரந்தர டிரஸ்டியாக நான் இருந்து வந்தேன். இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ஐசரி கணேஷ் மற்றும் அவருடைய மனைவி, மகள் என்னை தகாத வார்த்தைகளால் பேசி கல்வி குழுமத்திலிருந்து போலியான சான்றிதழை சமர்ப்பித்து நீக்கியுள்ளனர்.
அவர்களது கோபத்திற்கு காரணம் நான் டிரஸ்ட் மூலமாக வரக்கூடிய கணக்குகள் குறித்து கேள்வி கேட்டேன். அவர்கள் என்னை சரியான முறையில் குழுமத்திலிருந்து நீக்கவில்லை. தற்போது உள்ள நடைமுறைபடி அந்த டிரஸ்ட்டில் இருவருக்கும் சமமான பங்கு இருக்கிறது. ஆகையால் அந்த சொத்தில் எனக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி முதலமைச்சர் தனிப் பிரிவில் மனு அளித்துள்ளேன். மேலும், காவல் ஆணைய அலுவலகத்திலும் மனு அளித்துள்ளேன்.
இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாட தயாராக இருக்கிறேன். விரைவில் விசாரணை நடத்துவதாக போலீசார் உறுதியளித்துள்ளனர்” என்றார்.



Leave a Reply