மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக திமுக அமைச்சரின் பேச்சு பெண்களை அவமதிப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் அவர், “விருதுநகர் பகுதியில் மகளிர் உரிமைத் தொகை கேட்டு வந்த பெண்களிடம், ‘காது, மூக்கில் நகை அணிந்திருந்தால் ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியாது’ என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசினார். இது பெண்களை ஏளனப்படுத்தும் வகையில் உள்ளது” என்று குறிப்பிட்டார்.
மேலும், திமுக அரசு ஆட்சிக்கு வரும் முன் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என வாக்குறுதியளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பின்பு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததோடு, தற்போது நகை அணிந்த பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்க முடியாது என்ற நிலைப்பாடு, பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்குவதாக தினகரன் தெரிவித்தார்.
“மகளிரை தொடர்ந்து அவமதிப்பது, தரக்குறைவாக விமர்சிப்பது திமுகவின் அதிகாரத் திமிரையே காட்டுகிறது. அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் பெண்கள் ஒருமித்துக் கொண்டு திமுகவினரை ஆட்சியிலிருந்து விரட்டியடிப்பார்கள்” என அவர் வலியுறுத்தினார்.



Leave a Reply