தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கும் திமுக அரசின் திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் அவர், “ரூ.80,000 கோடி செலவில் 2,200 மெகாவாட் மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் மக்கள் மற்றும் அரசுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஆட்சி அமைக்கும் முன்பு திமுக வெளியிட்ட 231ஆம் வாக்குறுதியில், “தனியாரிடம் மின்சாரம் வாங்குவதை குறைத்து, மாசற்ற மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 20,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து குறைந்த விலையில் வழங்கப்படும்” என வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் ஆட்சியிலிருக்கும் நிலையில் அதற்கு முரணாக மக்கள் மீது கட்டணச் சுமை ஏற்றுவதாகவும் குற்றம் சாட்டினார்.
மின் வாரியத்தை நஷ்டத்தில் தள்ளி, தனியாரிடமிருந்து அதிக விலையில் மின்சாரம் வாங்குவதால் கட்டண உயர்வு தவிர்க்க முடியாத நிலை உருவாகும் என்றும், மாதம் ஒருமுறை மின்கட்டண கணக்கீடு செய்வோம் என்ற வாக்குறுதியையும் திமுக அரசு புறக்கணித்துவிட்டதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
“எனவே, தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கும் திட்டம் ஏதுமிருந்தால் அதை உடனடியாக கைவிட வேண்டும்” என வலியுறுத்தினார்.



Leave a Reply